கேள்விகளின் கனதியும், மௌனத்தின் அர்த்தமும்

🕔 July 30, 2016

Article - Nifras - 023
லையிடி வந்தால் அதற்கு உடனே மருந்துபோட வேண்டும். இல்லாவிட்டால் வேறு காரியங்கள் எதையும் செய்ய முடியாத பணிமுடக்கம் ஏற்பட்டுவிடும். ஒற்றைத் தலைவலிக்கு சில மருந்துகளும் மற்றைய தலைவலிக்கு வேறு சிலவும் நிவாரணமளிக்கும். சில தலையிடிகளுக்கு தைலங்களும் இன்னும் சிலவற்றுக்கு மாத்திரைகளும் பொருத்தமாக இருக்கும். இன்னும் ஒரு வகையிருக்கின்றது அது நாட்பட்ட தலைவலியாகும். அது எந்த மாத்திரைக்கும் தைலத்திற்கும் சரிப்பட்டு வராது, குணம்பெறுவதற்கு நெடுங்காலம் எடுக்கும். எது எவ்வாறிருந்தாலும், பல நாள் தலைவலிக்கு ஆங்கில மருந்தோ, நாட்டுப்புற மருந்தோ அல்லது குறைந்தபட்சம் பாட்டி வைத்தியமோ செய்யாமல், வெறுமனே தலையை தடவிக் கொண்டு இருந்தால், ஒருநாளும் தலைவலிகள் நாம் நினைத்த காலத்தில் குணமடைய மாட்டாது.

இது தனியே ஒரு மருத்துவ குறிப்பல்ல. அரசியல் நியதியுமாகும். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இப்பகுதியில் வெளியான கட்டுரையில், சாணக்கியத்திற்கு பெயர்போன முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் புதுப்புது தலையிடிகளை நாளாந்தம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார் என்று குறிப்பிட்டிருந்தோம். அந்த தலையிடிகள் ஒரு புள்ளியில் இருந்து இன்று தலை(மை)யின் சுற்றுவட்டத்துக்கும் வியாபித்துச் சென்று கொண்டிருக்கையில், மேலே குறிப்பிட்டது போல, பொருத்தமான வைத்தியம் பார்க்காமலே காலத்தையும் நேரத்தையும் றவூப் ஹக்கீம் கடத்திக் கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது.

இந்தப் பிரச்சினையானது, பஷீர் சேகுதாவூதினால் வந்தது, ஹசன்அலியும் அவருடன் நிற்கின்றார், கட்சியை அழிப்பதற்காக எழுச்சி என்ற பெயரில் சூழ்ச்சி நடக்கின்றது என்றெல்லாம் சொல்லி, அலட்டிக் கொள்ளாமல் இருப்பது, இந்தத் தலையிடிக்கு மருந்துபோடாமல், இந்தத் தலையிடி நேற்றைய வெயிலினால் வந்தது, முந்தைய நாள் கண்விழித்ததால் வந்தது, சளியும் பித்தமும் தொல்லை தருகின்றன என்று அதற்கான காரணங்களை தேடித்தேடியே… நோயை வளரவிடுவதற்கு மிக நெருக்கமான செயற்பாடு என்ற சொல்ல முடியும்.

செய்த சேவைகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தலைவரின் மரணத்திற்குப் பிறகு இந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட றவூப் ஹக்கீம், 16 வருடங்களாக அந்தக் கிரீடத்தை சுமந்து கொண்டிருக்கின்றார். அஷ்ரஃபின் மரணத்துயரில் இருந்து கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மீட்சி பெற்றிருக்காத ஒரு சூழலில் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று இவ்வளவு காலமாக ஹக்கீம் கட்சியை வழிநடாத்தியிருக்கின்றார் என்பது சாதாரண விடயமல்ல. இக்காலப்பகுதியில் பிரதான முஸ்லிம் கட்சி என்ற வகையில் மு.கா. பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. மு.கா.வில் இருந்த பலர் பிரிந்து சென்று தனித்தனியாக அரசியல் நடத்தினர். கட்சி தாவப் போவதாக சிலர் அச்சுறுத்தி தலைவரையும் பெல்டி அடிக்கச் செய்தனர் அல்லது அவ்வாறு சொல்லப்பட்டது. தனிப்பட்ட பலவீனம் சார்ந்த குற்றச்சாட்டுக்கள் உட்பட மேலும் பல விடயங்களில் தலைவர் மக்களுக்கு முன்னால் விமர்சிக்கப்பட்டிருக்கி;ன்றார். இப்படி எத்தனையோ கடந்து போயிருக்கின்றன.

இவற்றையெல்லாம் மிக லாவகமான முறையிலும்; சில வேளைகளில் தந்திரமான முறையிலும் ஹக்கீம் சமாளித்து வந்திருக்கின்றார். ஆனால் இன்று ஏற்பட்டிருக்கின்ற நிலைமை அதிலிருந்தும் வேறுபட்டதாகும். கட்சியின் மூத்த உறுப்பினர்களான ஹசன்அலி, பஷீர் போன்றோர் தலைவருக்கு உறுதுணையாக இருந்தனர். தலைவரைக் காப்பாற்றினால்தான் கட்சியை கட்டிக்காக்க முடியும் என்ற நிலை அப்போது இருந்தது. எனவே, தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், சதித்திட்டங்கள் சரியோ பிழையோ ஆனால்; அதற்கெதிராக நின்று ஹக்கீமை காப்பாற்றியவர்களில் மேற்சொன்ன இருவரும் பிரதானமானவர்கள். தலைமையை தனிப்பட்ட சிக்கல்களில் இருந்து தந்திரோபாய ரீதியாக விடுவித்ததில் கட்சியின் தவிசாளர் முக்கியமானவர். அதேபோன்று; பிரச்சினைகள் போய்க் கொண்டிருந்தாலும் கட்சியின் இமேஜை காப்பாற்றியதில் செயலாளருக்கு கணிசமான பங்கிருக்கின்றது. இதை தரைவரே மறுத்துரைக்க மாட்டார். ஆனால், இன்று ஹக்கீமுடன் இந்த இரண்டுபேரும் முரண்பட்டிருப்பதால், நிலைமை மிக மோசமாகியுள்ளது. கட்சிக்கு எதிரான சவால்களை கூட்டாக நின்று சமாளித்த மூவரில் இருவர் மற்றையவருடன் முரண்பட்டிருப்பதால் நிலைமைகளை சமாளிப்பதற்காக அதிகமாக ரிஸ்க் எடுக்க வேண்டிய நிலைமை தலைவருக்கு ஏற்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் தெரியவருகின்றது.

ஏவ்வாறிருப்பினும், றவூப் ஹக்கீம் இந்த சமூகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அவரது கொள்திறனுக்கும் பண்பியலுக்கும் ஏற்றாற் போல் பல விடயங்களை செய்திருக்கின்றார் என்பதை முஸ்லிம்கள் மறந்து விடக் கூடாது. வேலை வாய்ப்புக்களை வழங்கி இருக்கின்றார், பல சமாதான நீதிவான்களை உருவாக்கி இருக்கின்றார், பலருக்கு அமைச்சிலும் அதனுடன் தொடர்புபட்ட நிறுவனங்களிலும் வேலை வழங்கியிருக்கின்றார். நீர்வழங்கல் செயற்றிட்டங்களை தந்திருக்கின்றார். இப்படி இன்னும் பலவற்றை குறிப்பிடலாம். ஆனால் இவையெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற மகோன்னத அந்தஸ்தாளனுக்குரிய கடமைகள் அல்ல. மாறாக, இது ஹக்கீம் என்ற ஒரு அமைச்சருக்குரிய பணிகளாகும். அமைச்சருக்குரிய பணியை செய்துவிட்டு தலைவருக்குரிய பணியாக அதை சொல்லி திருப்திப்பட முடியாது.

இந்த வகையில் நோக்கினால், முஸ்லிம் சமூகத்தின் பிரதான தலைவர் என்ற அடிப்படையில் தனது சமூகத்திற்கும் வாக்காளப் பெருமக்களுக்கும் உரிமைசார், அரசியல்சார் விடயங்களில் எதிர்பார்த்த அளவுக்கு ஹக்கீம் செயற்படவில்லை என்ற கருத்து இன்று வலுப்பெற்று வருகின்றது. மு.கா.வின் தலைவர் என்ற அடிப்படையில் ஹக்கீம், சமாதான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார். இராஜதந்திரிகளுக்கு முஸ்லிம்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கின்றார். முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்படும் போது அவரது பாணியில் பொறுமைகாத்து கடைசிக் கட்டத்திலேனும் அறிக்கை விட்டிருக்கின்றார். பேரம் பேசல்களை மேற்கொண்டிருக்கின்றார். இதைவிட ஒரு தலைவர் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்பவர்களும் முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஏன் உருவாக்கப்பட்டது? அதனது அடிப்படை கொள்கையும் நோக்கமும் என்ன? என்ற ஆழமான விடயங்களை தெரியாதவர்களின் கேள்வியாகவே இது இருக்கும்.

வெற்றுக் கோரிக்கையா?

முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஜனநாயகம் செயன்முறைகள் இல்லை, தலைவர் பிழையான வழியில் கட்சியை வழிநடாத்திச் செல்கின்றார், முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் வேறு வரப்பிரசாதங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது, கட்சியின் சொத்துக்கள் மற்றும் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை போன்ற குற்றச்சாட்டுக்களே இப்போது முன்வைக்கபடுகின்ற அடிப்படை குற்றச்சாட்டுகளாகும். முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக ஹக்கீம் நியமிக்கப்பட்ட தினத்திலிருந்து முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக தலைவர் முன்னிற்கவில்லை என்பதும், இந்த வினாடி வரைக்கும் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதை தெளிவாக அறிவிக்காமல் தமிழர்களையும் முஸ்லிம்களையும் போக்குக்காட்டுவதும் பாரிய விமர்சனங்ளை உண்டுபண்ணயிருக்கின்றது. ஆக, தலைவர் செய்த தவறுகளை திருத்திக் கொள்வதற்கான அழுத்தங்களே இப்போது பிரயோகிக்கப்படுகின்றன. தவிர இது பிரதேசவாதமோ சதித்திட்டமோ அல்ல. அல்ல. ஆனால் தலைவர் திருந்துவதற்கான அறிகுறிகள் பெரிதாக தென்படவில்லை.

எத்தனையோ மூத்த உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் போதே ஹக்கீமுக்கு தலைவர் என்ற மகுடத்தை கிழக்கு போராளிகள் சூட்டினார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. அதுமட்டுமன்றி, அப்பதவியையும் கடந்த 16 வருடங்களாக கொடுத்திருக்கின்றார்கள் என்பதை, கிழக்கு மக்கள் பிரதேசவாதம் பார்க்கின்றார்கள் என்று சொல்கின்றவர்கள் அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டும். ஹக்கீம் மீது எத்தனையோ குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி, அவருக்கு எதிரானவர்களுக்கு துரோகிப்பட்டம் கொடுத்தவர்களும் கிழக்கு முஸ்லிம்களே. இன்று இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இன்னும் ஹக்கீமை ஒரு தலைவர் என்ற வகையில் நேசிக்கின்றவர்கள் கிழக்கு மாகாணத்திலேயே இருக்கின்றார்கள் என்பதையும் மறந்து விடக் கூடாது.

கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்குள் இருந்து ஒரு கட்சி உருவாகவில்லை என்றிருந்தால் அதை உருவாக்கிய அஷ்ரஃப் என்ற கிழக்கு மாகாணத்தவன் இல்லை என்றால், இன்று ஹக்கீம் என்ற தலைவரும் இல்லை. அவரோடு சேர்ந்து கொண்டு வரப்பிரசாதங்களை அனுபவிக்கின்ற ஆட்களும் இல்லை. இத்தனை முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் உருவாகி இருக்கமாட்டார்கள். முஸ்லிம்கள் இன்னும் பெருந்தேசிய கட்சிகள் தமது கையை உதறுகின்றபோது தெறிக்கின்ற சோற்றுப் பருக்கைகளுக்காக கையில் திருவோட்டுடன் நின்றிருப்பார்கள் என்பதை கனவிலும் மறந்து விடக் கூடாது. எனவே, பிரச்சினைகளை திசைதிருப்புவதை விடுத்து, களநிலைமைக்கான காரணங்களை கண்டறிவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு, அதற்கான தீர்வுகளை தேட வேண்டும்.

வேள்விக்கென்ன பதில்

மு.கா. தலைவர் செய்த நல்ல காரியங்களை விட, இன்னும் செய்யாமல் இருக்கின்ற கடப்பாடுகளே அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில் அவரது தலைமைத்துவம் மீது காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன, கேள்விகள் தொடுக்கப்படுகின்றன. குறிப்பாக, கட்சியின் தலைவரின் தான்தோன்றித்தனமாகன செயற்பாடுகளால் உட்கட்சி ஜனநாயகமும் மசூரா நடைமுறையும் சீர்குலைந்து விட்டதாக செயலாளர் ஹசன்அலி கூறிவருகின்றார். தனது அதிகாரங்களை நயவஞ்சகமான முறையில் குறைத்து, திரிபுபடுத்தப்பட்ட விபரங்களை உள்ளடக்கிய கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு ஹக்கீம் அனுப்பியது ஏன்? என்று கேட்டிருக்கின்றார். கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக கட்சியை கொண்டு செல்வதாக அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். இதயசுத்தியுடைய, சமூக சிந்தனை கொண்ட தலைமை என்றால் சூசகமான முறையில் ஏன் இதனைச் செய்ய வேண்டும்? என்பதே அவருடைய கேள்வியாக இருக்கின்றது.

இதேவேளை, ஏற்கனவே உயர்பீட உறுப்பினர்களுக்கு நீளமான கடிதத்தை எழுதியிருந்த தவிசாளர் பஷீர் சேகுதாவூத், அதன் பிறகு தாறுஸ்ஸலாம் சார்ந்த சொத்து விவகாரங்கள் குறித்து கடிதமொன்றை தலைவருக்கு எழுதினார். அதற்கு சரியான பதில் வழங்க அடுத்த உயர்பீடக் கூட்டம் வரைக்கும் காலஅவகாசம் கோரப்பட்டுள்ள நிலையில் அக்கடிதத்தை பொதுவான அறிதலுக்காக பஷீர் அண்மையில் பகிரங்கப்படுத்தி இருந்தார். தாறுஸ்ஸலாம் கட்டிடத் தொகுதியின் உரிமை யாருக்கு உள்ளது? அதிலிருந்து வருமானங்கள் கிடைக்கின்றதா? தனியார் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தாருஸ்ஸலாமுக்கு அருகிலுள்ள காணித் துண்டின் பழைய, புதிய உறுதிகளை உயர்பீடத்திற்கு காட்டமுடியுமா? கட்சியின் சின்னத்திற்கு எதிராக போடப்பட்ட வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் வழக்காளியிடம் இருந்து மானநஷ்டஈடு பெறப்பட்டதா? நஸீர் அகமட் கட்சியில் மீண்டும் இணைந்த போது இணக்கம் காணப்பட்டதன் படி கட்சியின் சொத்துக்கள் மீள ஒப்படைக்கப்பட்டதா? என்றெல்லாம் பல கேள்விகளைக் கேட்டிருந்தார்.

ஆனால், ஹசன்அலியின் கேள்விகளுக்கோ பஷீரின் கேள்விக் கணைகளுக்கோ மு.கா. தலைவர் பதிலளிக்கவில்லை. அத்துடன் அடுத்த உயர்பீடக் கூட்டத்தில் இது தொடர்பான மேலதிக கேள்விகள் முன்வைக்கப்படும் என்று அனுமானித்தோ என்னவோ, உயர்பீடக் கூட்டத்தையும் ஹக்கீம் இரண்டு மாதங்களாக நடத்தவில்லை. தவிசாளரும் செயலாளரும் கட்சியின் செயற்பாட்டாளர்களும் உண்மையைச் சொல்லுமாறு கேட்கின்ற போது அவ் விடயத்தை வேறு ஒரு முட்டுச்சந்தினை நோக்கி திருப்பி விடும் கைங்கரியத்தை ஹக்கீம் தரப்பு மேற்கொண்டு வருகின்றது. கேள்வியைப் பார்க்காமல், அதாவது, அதைத் தொடுத்தவன் இலக்கு வைக்கப்படுகின்றான். ஏன் இத்தனை வருடத்திற்கு பின் கேள்வி கேட்கின்றார்கள் என்று கேட்கின்றார்கள். இது, 15 வருடங்களின் பின் விவாகரத்திற்கு வரும் தம்பதியிடம் ஏன் முன்னமே பிரியவில்லை என்று கேட்பது போலிருக்கின்றது. ஆக. எல்லாவற்றுக்கும் இறைவன் ஒரு நேரம் வரவேண்டும்;.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அளிப்பதற்கு முற்படாமல் கேள்வி எழுப்பியவர்களுக்கு எதிரான பதில் தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் அவர்களை சமாளிப்பதற்கும் சமகாலத்தில் ஹக்கீம் தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது. குறிப்பாக, ஹசன்அலிக்கு எம்.பி.யை வழங்கி அவரை கட்சிக்குள் எடுப்பதற்கு தொடர்ந்தும் தூது விடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பசீரை எவ்வாறு சமரசப்படுத்தலாம் என்ற கோணத்திலும் ராஜதந்திரங்கள் பாவிக்கப்படுகின்றன. இவ்விரண்டு பேரும் வெளியில் இருப்பது மிக ஆபத்தானதாகும். இப்போதிருக்கின்ற களச்சூழலில் கிழக்கைச் சேர்ந்த ஒரு சிறிய உறுப்பினரைக் கூட கட்சிக்கு வெளியில் தள்ள மு.கா. தலைவர் விரும்பமாட்டார். இந்நிலையில் தவிசாளரையும் செயலாளரையும் சமரசப்படுத்துவதற்கு முயற்சி எடுப்பது ஆச்சரியமான விடயமல்ல. ஏனென்றால், ஒவ்வொரு ஊருக்குள்ளேயும் இரண்டு மூன்று மு.கா. பிரிவுகளை ஏற்படுத்தி அரசியல் செய்த ஹக்கீம், உயர்பீடத்திற்குள்ளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலும் பிளவுகள் ஏற்பட்டிருப்பதை கண்டு திகிலடைந்திருக்க வாய்ப்புள்ளது. ஒரு கட்சி என்ற அடிப்படையில் இவ்வாறான உயர்மட்ட பிளவுகளை வைத்துக்கொண்டு, எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்ற அவரது அக்கறை நியாயமானதே.

மக்கள் மன்றம்

ஒருவேளை, ஏதோ காரணங்களால் ஹசன்அலி சமாளிக்கப்படலாம். பசீர் சேகுதாவூத் மற்றும் அவர்கள் போன்றவர்கள் ஹக்கீமின் வழிக்கு கொண்டு வரப்படலாம். அதன் பின்னர், கேள்விகள் எல்லாம் அடங்கிப் போகவும் கூடும். ஆனால் இன்று மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கின்ற கேள்விகளுக்கு பதிலளித்தேயாக வேண்டும். பசீரும் ஹசன்அலியும் ஏனைய உயர்பீட உறுப்பினர்களும் எழுப்புகின்ற கேள்விகள், சந்தேகங்கள் வெறுமனே அவர்களுக்குரிய கேள்விகள் மட்டுமல்ல. அதை அப்படிப் பார்க்கவும் முடியாது. ஏனென்றால், முஸ்லிம் காங்கிரஸ் என்பது உண்மையிலேயே மக்களின் கட்சி என்றால், அண்மைய நாட்களில் போராளிகள் மற்றும் ஆதரவாளர்களின் மனங்களில் ஏற்பட்டிருக்கின்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதில் இருந்து எந்த சாணக்கிய அரசியல்வாதியும் விலகியிருக்க முடியாது. அப்படி இருந்தால், அதற்கு பலதரப்பட்ட அர்த்தம் கொள்ளப்படும். உதாரணமாக, திருமலையில் வாழ்கின்ற ஒரு ஆரம்ப போராளி தாறுஸ்ஸலாம் யாருடைய பெயரில் இருக்கின்றது என்று கேட்கக் கூடாதா? அம்பாறையில் ஒரு சிறுகிராமத்தில் வாழும் ஏழை வாக்காளன் ஏன் ஒரு மூத்த போராளியின் அதிகாரங்களை பறித்தீர்கள் என்று கேட்க முடியாதா? அவ்வாறு கேட்பவர்கள் எல்லோரும் கட்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்லி, பதில் சொல்வதில் இருந்து விலகி இருப்பது முறையல்ல.

அதேபோன்று, தலைவரின் நம்பிக்கையை வென்ற உயர்பீட உறுப்பினர் ஒருவர் 18ஆவது திருத்தத்திற்கு தலைவர் பணம் வாங்கவில்லை என்றே சொல்லி இருக்க வேண்டும். ஆனால் ‘அவர் வாங்கியிருந்தால் ஹசன்அலிக்கும் பங்கிருக்கின்றது’ என்று சொல்லியிருக்கின்றார். செயலாளரை மாட்டிவிடும் தோரணையில், தலைவர் வாங்கவில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவந்து, ‘வாங்கியிருந்தால்…’ என்று சந்தேகமாக பேசி இருக்கின்றார். இதைப் பார்த்த ஒரு தீவிர போராளி ‘தலைவரே இப்படியெல்லாம் கதைகள் வருகின்றன. உங்களை அசிங்கப்படுத்துகின்றார்கள். நீங்கள் அவ்வாறு பணம் வாங்கவில்லை என்று சொல்லி உங்களது நேர்மைத் தன்மையை நிரூபியுங்கள் என்று கேட்டால், அந்த நபரை குற்றம் சொல்லி கட்சியில் இருந்து ஒதுக்குவதா அல்லது பதிலளிப்பதா ஒரு தலைமைக்கு பிளஸ் பொயின்ட் என சிந்திக்க வேண்டும்.

இந்த கேள்விகளும் அதன்வழிவந்த சந்தேகங்களும் மு.கா. தலைவர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவர் மட்டுமன்றி, இவ்வளவு காலமும் ஹக்கீமோடு இருந்து அவரது காரியங்களில் சரிகண்ட ஹசன்அலி மற்றும் பசீர் போன்ற எல்லோருக்கும் அவரது தவறுகளில் பங்கிருக்கின்றது. பசீர் எழுதிய கடிதத்தின் கேள்விகளுக்கான பதில்களை அவர் ஓரளவுக்கு அறிந்திருப்பார். அதேபோன்று தலைவரிடம் அதிகாரங்கள் எவ்வாறு குவிவடைந்து ஜனநாயகம் அற்றுப்போனது என்பது ஹசன்அலிக்கு தெரியாத விடையல்ல. எனவே, மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கின்ற சந்தேகங்களுக்கும் பொதுத்தளத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கும் பதில் சொல்லப்பட வேண்டும்.

மூன்றுபேரும் ஒழித்து விளையாடுவதன் மூலம் மக்களைக் குழப்பிவிடும் செயற்பாட்டை இன்னும் தொடரக் கூடாது.

நன்றி: வீரகேசரி (30.07.2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்