நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரில் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இவருடன் மேலும் ஐவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினருக்கு நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கவர்ஸ் கோபரேஷன் நிறுவனத்தின் தலைவர் என அறியப்படும் நாமல் ராஜபக்ஷ, ‘ஹெலோ கோப்’ நிறுவனத்தின், கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான பங்குகளைக் கொள்வனவு செய்துள்ளதாகவும், அது தொடர்பில் அவருக்கு பணம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இதனையடுத்தே, மேற்படி உத்தரவினை நீதவான் வழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போது ஒன்றிணைந்த எதிரணியினர் ஏற்பாடு செய்துள்ள பாத யாத்திரையில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.