75 முஅத்தின்களுக்கு கௌரவம்; We care for you பௌண்டேசனின் மற்றுமொரு சாதனை
🕔 June 18, 2016
– முன்ஸிப் –
அம்பாறை மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் கடமையாற்றும் 75 முஅத்தின்களைக் கௌரவித்து, அவர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் பரிசுகளை வழங்கும் நிகழ்வொன்றினை வீ கேர் பொ யு (We care for you) பௌண்டேசன் நேற்று வெள்ளிக்கிழமை அந்த அமைப்பின் சாய்ந்தமருது காரியாலயத்தில் நடத்தியது.
வீ கேர் பொ யு (We care for you) பௌண்டேசனின் தலைவர் சர்ஜுன் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், பிரதம அதிதியாக சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் கலந்து கொண்டார்.
வீ கேர் பொ யு (We care for you) பௌன்டேசனின் ஸ்தாபகத் தலைவர் யு.எல்.எம். அபூபக்கர் நினைவாக நடைபெற்ற இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களில் கடமையாற்றிவரும் 75 முஅத்தின்களுக்கும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதியமைச்சர் பைசால் காசிமின் கரங்களினால் பொன்னாடை போர்த்தப்பட்டு, பரிசில்களும் வழங்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்திலுள்ள பெருமளவான முஅத்தின்கள் இவ்வாறு ஒரு நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை தொடர்பில், நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அதிகள் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததனர்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், முன்னாள் பிரதியமைச்சர் எஸ். நிஜாமுத்தீன், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எல். நூறுல் மைமூனா, கல்முனை பள்ளிவசால்கள் சம்மேளனத் தலைவா் டொக்டா் எஸ்.எம்.ஏ. அசீஸ், சாய்ந்தமருது பள்ளிவாசல் செயலாளா் எம். ஏ. மஜீத், மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளர் எஸ்.எல்.எம். பளீல் பி.ஏ உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இதன்போது, நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டவர்களும், ஊடகவியலாளர்களும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டமையும் விசேட அம்சமாகும்.
கடந்த காலங்களில் வீ கேர் பொ யு (We care for you) பௌண்டேசன் அமைப்பானது, ஏழை மாணவர்களின் கல்விக்கான உதவிகள் உள்ளிட்ட பல சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி கௌரவிப்பு நிகழ்வினைத் தொடர்ந்து நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.
(படங்கள்: அஷ்ரப் ஏ சமத்)