தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு கொலை அச்சுறுத்தல்

🕔 June 15, 2016

Naajim - VC - 976– எம்.வை. அமீர் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், தான் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுவந்த ஊழல், மோசடிகளை – தான், முடிவுக்குக் கொண்டு வந்ததன் காரணமாகவே, இவ்வாறான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இவ்வாறான மிரட்டல்களுக்கு பயந்து, ஒருபோதும் தான் மேற்கொள்ளும் நற்பயணத்தை நிறுத்தப்போவதில்லை என்றும் அவர் சொன்னார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட, கல்விசார ஊழியர்களின் NAWS எனும் அமைப்பினால், ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வு, அந்த அமைப்பின் தலைவர் எம்.ஏ. றிபாயிஸ் முஹம்மட் தலைமையில் பிரயோக விஞ்ஞானபீட சிற்றுண்டிச்சாலையில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, உபவேந்தர் நாஜிம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“நல்ல நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், குறித்த இலக்கை நோக்கியே பயணிக்க வேண்டும். இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படும் முஸ்லிம் மாணவர்களில் பெரும்பான்மையினர், இந்த பல்கலைக்கழகத்துக்கே வருகின்றனர். எங்களை நம்பிவரும் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். அதற்காக இங்கு கடமையாற்றும் அடிமட்ட ஊழியர் முதல் உயர்மட்ட ஊழியர்கள் வரை, தங்கள் கடமைகளை மனச்சாட்சியுடன் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை ஒழுங்காக செய்துள்ளோமா என இறைவன் நிச்சயமாக வினவுவான். நாங்கள் ஒழுங்காக வேலைசெய்திருந்தால் பயப்பட வேண்டியதில்லை.

நான், பல்வேறு வசதிகளுடனேயே இங்கு வருவதற்கு முதல் இருந்தேன். இங்கு வந்தால் அச்சுறுத்தல்கள் வரும் என்று என்னிடம் பலரும் அப்போதே கூறினர். அவை தொடர்பில் நான் அலட்டிக்கொள்ளவே இல்லை.

விபத்தின் ஊடாக கொலைசெய்வோம், நஞ்சூட்டி கொல்லுவோம் மற்றும் குண்டுத்தாக்குதல் நடத்துவோம் என்றெல்லாம் மிரட்டுகிறார்கள். நான் ஒருபோதும் மரணத்துக்குப் பயந்தவன் இல்லை. இந்த பல்கலைக்கழகத்தில் நான் இருக்கும் வரை, அநீதி, ஊழல் மற்றும் மோசடிகளுக்கு இடமளிக்க மாட்டேன். இந்தப்பயணத்தில் மரணத்தை சந்திக்க நேரிட்டாலும் அதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வேன்.

கடந்த காலங்களில் நீங்கள் எவ்வாறு பணியாற்றியிருந்தாலும் பரவாயில்லை. இனிவரும் காலங்களில் நமது பல்கலைக்கழகத்தை நாம் உயர்நிலைக்குக் கொண்டுசெல்ல, ஒவ்வொருவரும் மனச்சாட்சியுடன் செயற்பட்டு அவரவரது கடமைகளை சிறப்பாக செய்வதுடன், என்னுடன் இணைந்து பணியாற்றுங்கள்” என்றார்.

நிகழ்வின்போது சிரேஷ்ட தொழில்நுட்பவியலாளர் எம்.ஐ.எம்.ஏ. ஹமீட்டின் மகள், இன்பாஷா ஹமீட், சுற்றாடல முன்னோடி வேலைத்திட்டத்தில், தேசிய ரீதியில் ஜனாதிபதி விருதினை பெற்றதையடுத்து, NAWS அமைப்பின் சார்பில் உபவேந்தரினால் கௌரவ  ஞாபகசின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்ட எம்.எச்.எம். றிசாட் என்ற ஊழியருக்கு அமைப்பினால் உதவுதொகை ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.Naajim - VC - 977 Naajim - VC - 978

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்