சதா காலமும் தாங்கள்தான் MP யாக இருக்க வேண்டும் என்கிற நிலை மாற வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

🕔 March 13, 2016

Hakeem - 00111
– மப்றூக் –

முஸ்லிம் காங்கிரசுக்குள் சதாகாலமும் தாங்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும், தங்களுக்குத்தான் அனைத்து நியமனங்களும் கிடைக்க வேண்டும் என்கிற நிலைவரம் மாற வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.

இவ்வாறான நிலைவரத்தினை மு.காங்கிரசின் தலைமை தடுக்க முயற்சிக்கும் போது, தலைமைக்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு, எதிர்வரும் 19 ஆம் திகதி பாலமுனையில் நடைபெறவுள்ளதையொட்டி, மு.காங்கிரசின் இளைஞர்களை சந்திக்கும் நிகழ்வொன்று, சனிக்கிழமையன்று பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதில், கலந்து கொண்டு உரையாற்றும்போதே, மு.கா. தலைவர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் உள்ள தனித்தன்மைகளாக பல விடயங்கள் உள்ளன. அவற்றில் ஒரு விடயம் எனக்குப் பிரதானமாகப் படுகிறது.

இந்த நாட்டிலுள்ள இதர கட்சிகளில் ஒரு பிணி பீடித்திருக்கிறது. பாரம்பரிய ரீதியாக அந்தக் கட்சிகளுக்குள் வாரிசுரிமை அரசியல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமைதான் அந்தப் பிணியாகும். ஆனால், மு.காங்கிரஸில் மாத்திரம் வாரிசுரிமை அரசியல் என்பது கிடையவே கிடையாது.

மு.காங்கிரசுக்குள் வாரிசுரிமை அரசியல் செய்ய வந்தவர்கள், தமது தலைகளில் தாமே மண்ணை வாரிக் கொட்டிக் கொண்டனர். கட்சிக்குள்ளிருக்கும் சிலரிடம் வாரிசு அரசியல் வேண்டாம் என்று தடுத்திருக்கிறேன். தேர்தல்கள் மூலம் தங்கள் குடும்பத்தவர்களை தமது அரசியல் வாரிசுகளாக நுழைக்க நினைப்பவர்களுக்கு, இந்தக் கட்சிக்குள் எந்தவிதமான அங்கீகாரங்களும் கிடையாது.

மாற்றுக் கட்சிகளிலிருந்து முஸ்லிம் காங்கிரசுக்கு வந்தவர்களில் சிலர், வாரிசுரிமையால்தான் தமக்கான அங்கீகாரம் கிடைத்ததாக எண்ணிக் கொண்டு வந்தனர். அவர்களும் இந்தக் கட்சியில் நீடிக்கவில்லை.

இந்த வாரிசுரிமை என்பது மேட்டுக்குடிப் பழக்கமாக உள்ளது. இந்த வகை அரசியலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்துக்குள் இடமில்லை. இதனால், சிலருக்கு இந்த இயக்கத்தை ஜீரணிக்க முடியாமல் விலகிப் போய் விட்டார்கள்.

இன்னொருபுறம், முஸ்லிம் காங்கிரசுக்குள் இருப்பவர்களுக்கும் இடையிடையே இந்த வாரிசுரிமை அரசியல் ஆசை வந்தது. தலைவர் தடுத்தும் கேளாமல் வாரிசுரிமை அரசியல் செய்து, தமது தலையில் மண் அள்ளிப் போட்டுக் கொண்டனர். அவர்களையெல்லாம் இந்த இயக்கம் தோற்கடித்தது. தமது சகோதரர்களையும், மகன்மாரினையும் தேர்தலில் களமிறக்க வேண்டும் என்று வந்தவர்களுக்கு இதுதான் நடந்தது.

எமது கட்சியின் பிரதிச் செயலாளரும், கல்முனை மாநகர மேயருமான நிஸாம் காரியப்பர் இந்த மேடையில் இல்லை. ஆனால், அவரை நான் ஒரு உதாரணமாக சொல்ல வேண்டியுள்ளது. மு.காங்கிரசின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் வாழும் காலத்தில், நிஸாம் காரியப்பரிடம் சொன்னார், நான் இருக்கும் வரை, நீங்கள் அரசியலுக்குள் நுழையக் கூடாது என்று.

நிஸாம் காரியப்பர் தன்னுடைய குடும்பத்தவர் என்பதனால், மறைந்த தலைவர் அப்படிச் சொன்னார். மறைந்த தலைவருடன் ஆரம்பத்திலிருந்தே நிஸாம் காரியப்பர் இருந்து வந்தவர். ஆனால், அவரை அரசியலுக்கு தலைவர் அறிமுகப்படுத்தவில்லை. தலைவரின் மறைவுக்குப் பின்னர்தான், அவர் அரசியலுக்குள் வந்தார்.

இதனால்தான், மேட்டுக்குடி வர்க்கத்தின் சொத்து என்று எண்ணிக் கொண்டிருந்த அரசியலை, சாதாரண மக்களிடமும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தினால் கொண்டு செல்ல முடிந்தது.

முஸ்லிம் காங்கிரசில் நின்று பிடிப்பதென்பதும் சிலருக்குக் கஷ்டமான விடயமாக உள்ளது.

முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டுக்கு பிரதம விருந்தினர்களாக வரவுள்ள ஜனாதிபதியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எவ்வளவோ பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது. தமது கட்சிக்குள் என்ன பிரச்சினை உருவானபோதும், இருவரும் கட்சியை விட்டுச் செல்லவில்லை. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ இப்போது அவரின் கட்சியைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்.

முஸ்லிம் காங்கிரசில் சதா காலமும் நாங்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும், எப்போதும் எங்களுக்குத்தான் நியமனம் வேண்டும் என்கிற நிலைவரம் மாறவேண்டும். இந்த நிலைவரத்தினைத் தடுத்தால் தலைவருக்கு எதிராக எழுவார்கள். தலைவருக்கு எதிராக அவதூறுகள் கிளம்பும்.

அடுத்த பரம்பரைக்கு இந்தக் கட்சியை பொறுப்புச் சாட்டுவதாக இருந்தால், அடுத்த பரம்பரையினர் படியேறிவந்து, இந்தக் கட்சியின் உயர் இடங்களில் அமர்வதற்கான அந்தஷ்துக் கிடைக்க வேண்டும். அதற்கான ஒரு பின்புலத்தினை உருவாக்குவதற்கு நாங்கள் எல்லோரும் திடசங்கற்பம் பூண வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றபோது, மற்றைய இரண்டு பிரதான சமூகங்களும், இளைஞர்களுக்கு மத்தியில் வன்முறைப் போராட்டத்தினை அரவணைத்த நிலையில் இருந்தது. ஆனால் முஸ்லிம் சமூகத்துக்குள் ஒழுங்குபடுத்தப்பட்ட வன்முறைக் கலாசாரம் உருவெடுக்காமல் தடுத்த, மாபெரும் சாதனையை முஸ்லிம் காங்கிரஸ் செய்தது.

முஸ்லிம் இளைஞர்களை வன்முறைக்குப் பலியாக்காமல், முஸ்லிம் காங்கிரஸ் பாதுகாத்தது என, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்’ என்றார்.

இந்த நிகழ்வில், பிரதியமைச்சர்களான பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஐ.எல்.எம். மாஹிர், ஆரிப் சம்சுடீன், ஏ.எல். தவம், கல்முனை மாநகர பிரதி மேயரும், மு.காங்கிரசின் சிரேஸ்ட தலைவருமான முழுக்கம் மஜீத், அட்டாளைச்சேனை பிரதே சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. அன்சில், மு.காங்கிரசின் ஸ்தாபகத் தவிசாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளர் எஸ்.எல்.எம். பழீல் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும், முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளருமான யூ.எல். வாஹித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். Hakeem - 002Hakeem - 004Hakeem - 003

Comments

புதிது பேஸ்புக் பக்கம்