
கம்பனிகளுடன் குத்தகை ஒப்பந்தம் நீடிக்கப்படுவது, பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்களின் காணி உரிமை – உறுதி செய்யப்பட்ட பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும் எனும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாட்டை – கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானிடம் வலியுறுத்தியுள்ளார்.
இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுடைய அழைப்பின் பேரில், இந்தச் சந்திப்பு கொழும்பு வோட்டர்ஸ்-எட்ஜ் உணவகத்தில் இன்று (28) நடைபெற்றது.
குறித்த சந்திப்புத் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெளிவிக்கப்பட்டுள்ளதாவது;
இ.தொ.காவின் சில தரப்பினர், கூட்டணியின் நிலைப்பாடுகளை திரித்து கூறுவதை நிறுத்த வேண்டும் மனோ கணேசன், செந்தில் தொண்டமானிடம் இதன்போது வலியுறுத்தினார்.
கம்பனிகளுடன் குத்தகை ஒப்பந்தத்தை, 1992ம் ஆண்டு ஆரம்பித்து வைத்த தொழிற்சங்கமான இ.தொ.கா, இன்று குத்தகை ஒப்பந்தத்தை கிழித்து எறிய தீர்மானித்துள்ளதா என மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.
இது பற்றிய முரண்பாடான கருத்துகளை வெளியிடுவதை நிறுத்தி, தமது ஒரே நிலைப்பாடு எது என்பதை இ.தொ.கா தெளிவு படுத்த வேண்டும் எனவும் மனோ கணேசன் கேட்டுக்கொண்டார்.
”குத்தகை ஒப்பந்தம் செய்து, தொழில்துறை பாதுகாக்க படவேண்டும். அதேவேளை நமது மக்களின் காணி உரிமையும் பாதுகாக்க பட வேண்டும் என்பது கூட்டணியின் ஒரே கொள்கை” என மனோ கணேசன் தெரிவித்தார்.
இதன்போது, தமது நிலைபாடும் இதுவே என செந்தில் தொண்டமான் தெரிவித்தார் என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பெருந்தோட்டங்களில் வாழும் திருமணமான ஒவ்வொரு குடும்பத்துக்கும், அவர்கள் தோட்டங்களில் வேலை செய்தாலும், செய்யா விட்டாலும், 20 பேர்ச் வதிவிட காணி வழங்கப்பட வேண்டும் என மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார்.
வாழ்வாதார காணி தொடர்பில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது “ஹட்டன் பிரகடனத்தில்” தந்த உறுதிபாட்டுக்கு இணங்க, தரிசு நிலங்களை பெருந்தோட்ட மலையக தமிழ் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, பிரித்து வழங்க வேண்டும் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் இதன்போது கூறியுள்ளார்.
”மலையக சிவில் சமூகம், ஏனைய அரசியல் கட்சிகள், ஆகியவற்றுடனும் பேசுவோம். ஆனால், வதிவிட காணி, வாழ்வாதார காணி, தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி, கூட்டணியாகவும், கூட்டணி கட்சிகளாகவும் எப்போதும் உறுதியான ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளன” எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இதொகா தலைவரிடம் மேலும் கூறியுள்ளார்.



