
இலங்கை தனது நெல் வயல்களில் கணிசமான பகுதியில் பயிரிடுவதை நிறுத்த வேண்டும் என்றும், தற்போதைய நெல் உற்பத்தியை உடனடியாக மூன்றில் ஒரு பங்காவது குறைக்க வேண்டும் என்றும், விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே. டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
இல்லையெனில் விவசாயிகள், ஒட்டுமொத்த விவசாயத்துறை மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைக் கூறினார். மேலதி கையிருப்புகள் மற்றும் சந்தையில் நிலவும் மந்தமான தேவை ஆகியவை – ஏற்கனவே இந்தத் துறைக்கு ஒரு தீவிர சிக்கலை உருவாக்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மின்னேரியாவிலிருந்து ஹிங்குராக்கொட நகருக்கு வரும் வழியில் விவசாயிகள் பயிரிடுவதைக் கண்டதாகக் குறிப்பிட்ட அவர், அவர்கள் யாருக்காகப் பயிரிடுகிறார்கள் என்றும், இதற்கான தேவை எங்கே உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
“யாருக்குப் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி, நாம் நமது நெல் வயல்களில் கணிசமான பகுதியில் பயிரிடுவதை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்,” என்று அமைச்சர் லால் காந்த கூறினார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் வசமுள்ள நெல்லை இப்போதே சந்தைக்குக் கொண்டுவந்தால், நெல் மற்றும் அரிசியின் விலை இன்னும் சரிந்துவிடும் என்று அவர் எச்சரித்தார்.
விவசாயத்துறை தொடர்ந்து இயங்க வேண்டுமானால், அரிசியின் விலையை ஒரு குறிப்பிட்ட நிலைக்குக் கீழே செல்ல அனுமதிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார். “நிச்சயமாக, தற்போது பயிரிடப்படும் நெல் வயல்களில் மூன்றில் ஒரு பங்கையாவது – நாம் உடனடியாகக் குறைக்கத் தவறினால், நமது விவசாயிகள், நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத்துறை ஆகியவை கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்படும்” என்று லால் காந்த கூறினார்.
பெரும்போக அறுவடை தொடங்குவதற்கு முன்பாக, இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கான வழிகளை – அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும், இதில் ஏற்றுமதி வாய்ப்புகளும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், விவசாயிகள் மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
மன்னர் பராக்கிரமபாகு காலத்தையும், அக்காலத்தில் இலங்கை பெற்றிருந்த “கிழக்கின் தானியக் களஞ்சியம்” (Granary of the East) என்ற பெருமையையும் நினைவுபடுத்திய லால் காந்த, ‘தானியம்’ என்பது நெல்லை மட்டுமே குறிக்காது என்று சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் சிறியளவு நெல் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாகவும், பிற தானியங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் கூறினார். “நீங்கள் பயிரிடுவது உண்மைதான், ஆனால் அதை விற்பனை செய்வதற்கு இலங்கையில் இடமில்லை,” என்று விவசாயிகளிடம் கூறிய அவர், “ஏற்கனவே கையிருப்புகள் குவிந்து கிடக்கின்றன. தேவைக்கு அதிகமான அளவு கையிருப்பில் உள்ளது. எனவே, நாம் மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.



