
இயந்திரக் கோளாறுக்குள்ளான நிலையில், ஹம்பாந்தோட்டையிலிருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் காணப்பட்ட கப்பலொன்று, பாதுகாப்பாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இது சைப்ரஸ் நாட்டு கொடியைக் கொண்ட சரக்குக் கப்பல் எனத் தெரியவருகிறது.
‘எம்.வி. ஏ.ஏ.எல் ஜிப்ரால்டர்’ (MV AAL Gibraltar) என்று பெயரிடப்பட்ட, 159.99 மீட்டர் நீளமும் சுமார் 23,000 டொன்கள் சரக்கையும் கொண்ட இந்தக் கப்பல், நான்கு மீட்பு இழுவை கப்பல்களைப் பயன்படுத்தி துறைமுகத்திற்கு இழுத்து வரப்பட்டது.
வணிகக் கப்பல் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம், கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் துறைமுக அதிகாரி ஆகியோரின் பரிந்துரைகளின் பேரில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம், தற்போது நடைபெற்று வரும் கப்பல் பழுதுபார்ப்புப் பணிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப சேவைகளையும் பிற வசதிகளையும் வழங்கியுள்ளது.



