தலைப்புச் செய்திகள்

2013இல் நடந்த கொலைக்கு நேற்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

நபர் ஒருவரை தடியால் அடித்துக் கொன்றமை தொடர்பான வழக்கில், பலபிட்டிய மேல் நீதிமன்றம் இரு பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

மீட்டியாகொட – கலுபே பகுதியில், 2013-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் திகதி தனிப்பட்ட தகராறு ஒன்றின் போது, கலுவஹந்தி தீபால் வீரரத்ன என்பவர் தடியால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகவே இந்த வழக்கு தொடரப்பட்டது.

ஹிக்கடுவை – கலுபேயைச் சேர்ந்த 51 வயதான ‘பொட்ட கிரா’ எனப்படும் அப்புவஹந்தி அஜித் மற்றும் கொரட்டகொடவைச் சேர்ந்த 41 வயதான லட்டு அமித் ஆகிய இரு பிரதிவாதிகள் மீதான விசாரணையை நிறைவு செய்த மேல் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்த, நேற்று (19) இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

அரச சட்டத்தரணி செனுரி குணதிலக்க வழக்குத் தரப்பு வாதங்களை முன்வைக்க, சம்பவத்தின் போது மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் தினேஷ் நிஷாந்த இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்த இரு பிரதிவாதிகளும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட உள்ளனர்.