தலைப்புச் செய்திகள்

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 04 ஆண்டுகள் சிறைத்தண்டனையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது

இஸ்லாத்தை அவமதித்ததாகவும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய கருத்துகளை வெளியிட்டதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக, கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு காலக் கடுமையான சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தண்டனையையும் ரத்து செய்யக் கோரி, ஞானசார தேரர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2016-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் திகதி கொழும்பு – கிருலப்பனையில், கூரகல விகாரை தொடர்பாக ஞானசார தேரர் நடத்திய ஊடக சந்திப்பில், இஸ்லாத்தை அவமதித்துப் பேசினார்.

அவரது கருத்துகள் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையிலும், இன மற்றும் மத சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாகவும் அமைந்ததாகக் குற்றம் சாட்டி, சட்டமா அதிபர் அவர் மீது தண்டனைச் சட்டக்கோவையின் 291-வது பிரிவின் கீழ் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

2024-ஆம் ஆண்டில், கொழும்பு மேல் நீதிமன்றம் ஞானசார தேரர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்தது. மேலும், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தனது தண்டனையை ரத்து செய்யக் கோரியும், குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் – ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இருப்பினும், அவரது மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தியது.

ஞானசார தேரர் தற்போது நீதிமன்ற அவமதித்த குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.