தலைப்புச் செய்திகள்

சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட ராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்திற்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை – உச்ச நீதிமன்றம் இன்று (18) உறுதிப்படுத்தியது. அவருக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, சஷி வீரவன்ச தாக்கல் செய்திருந்த இந்த மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.

மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சஷி வீரவன்சவை உடனடியாக விளக்கமறியலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக, அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உச்ச நீதிமன்றம் பணித்தது.

இந்தக் குற்றச்சாட்டில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட சஷி வீரவன்சவுக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 2022 மே 27 அன்று இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.

இதனை எதிர்த்து அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். அந்த நீதிமன்றம், 2026 ஜூன் 11 அன்று அவரது மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்து, ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிப்படுத்தியது.

அதன்பின்னர், அந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி – அவர் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

தற்போது உச்ச நீதிமன்றமும் அவரது மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்துள்ளதால், அவருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.