
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மூன்றாண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதங்களுக்கு எதிரான மேல்முறையீட்டை விசாரித்த இரு நீதியரசர்கள் பிளவுபட்ட தீர்ப்பை எட்டியதைத் தொடர்ந்து, அந்த மேல்முறையீட்டை நாளை (11) மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் முன்னிலைில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டது.
நீதியரசர்கள் பி. குமரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் முன்னிலையில் இந்த மேல்முறையீடு – தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதியரசர் குமரன் ரத்னம், அமர்வு பிளவுபட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கைக்காக இந்த மேல்முறையீடு – மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவருக்கு அனுப்பப்படும் என்றும் பகிரங்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பிணையில் இருந்த ஹிருணிகா பிரேமச்சந்திர – இதன்போது நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தெமட்டகொடவில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞரைக் கடத்தி, சட்டவிரோதமாக சிறைவைத்து, தாக்கிய வழக்கில் – ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, சட்டமா அதிபர் – கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார். 2015 டிசம்பர் 21 அன்று அவர் ஒரு டிஃபெண்டர் வாகனத்தில் கடத்தப்பட்டார்.
விசாரணையின் போது ஹிருனிகாவின் ஆதரவாளர்களில் எட்டு பேர் – தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைகளையும் அபராதங்களையும் பெற்றனர். ஹிருனணிகா குற்றத்தை மறுத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, மேல் நீதிமன்றம் ஹிருணிகாவை 18 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறிந்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்தது. தனது தண்டனை, சிறைத் தண்டனை மற்றும் அபராதங்களை ரத்து செய்யக் கோரி அவர் மேல்முறையீடு செய்தார்.
ஹிருணிகா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெனாண்டோவும், சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாராவும் ஆஜரானார்கள்.



