
வெலிகம, கப்பரத்தோட்ட கடற்கரைப் பகுதியில் 100 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் இன்று (15) காலை கைப்பற்றப்பட்டது.
கடற்படையினர் கைது செய்த ஐந்து சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த போதைப்பொருள் சிக்கியது.
இலங்கை கடற்படை, பொலிஸார் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் மூலமே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கப்பரத்தோட்ட கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 06 சாக்குகளுக்குள், 120 பொட்டலங்களாக இருந்த இந்த போதைப்பொருட்களுடன், இரண்டு செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் இணைய இணைப்பு சாதனம் ஒன்றும் விசேட அதிரடிப்படையினரால் (STF) மீட்கப்பட்டன.
தெற்கு கடற்பரப்பில், டோண்ட்ரா (Dondra) பகுதிக்கு அப்பால், கடந்த 2026 ஒக்டோபர் 13 அன்று கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் வழங்கிய நம்பகமான தகவலின் அடிப்படையிலேயே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான உள்ளூர் மீன்பிடி படகு ஒன்றுடன், அதில் இருந்த ஐந்து சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.
இந்த கூட்டு நடவடிக்கையில் கடற்படை, அரச புலனாய்வு சேவை, பொலிஸார், விசேட அதிரடிப்படை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) மற்றும் இலங்கை கடலோரக் காவல்படை ஆகியவை பங்கேற்றன.
இதற்கிடையில், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அந்த ஐந்து சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



