
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் இன்று காலை விசாரணையொன்றின் பொருட்டு முன்னிலையான நாமல் ராஜபக்ஷவிடம் 05 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு 2013இல் விமானங்களைக் கொள்வனவு செய்த போது, விமான உற்பத்தி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் நாமல் கைதாகியுள்ளார்.
இதனையடுத்து அவர் கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (04) ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை செப்டம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் சமர்ப்பிப்புகள் மற்றும் சந்தேகநபர் தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



