
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவரும், விசேஷ குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணிபுரிபவருமான பொலிஸ் பரிசோதகர் ஒருவரை, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்த நிலையில், அவரை ஜுலை 03ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
களுத்துறை வடக்கில் உள்ள ஒரு விடுதியில் ரூ.01 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட இவரை, கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா விளக்க மறியலில் வைக்குமமாறு உத்தரவிட்டார்.

தொழிலதிபர் ஒருவர் – லஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கியதைத் தொடர்ந்து, நேற்று இரவு (22) நடத்தப்பட்ட ஒரு ரகசிய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார்.
விசாரணையிலுள்ள ஒரு வாகனத்தின் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்வதைத் தவிர்ப்பதற்கும், அதனை அதன் உரிமையாளரிடம் திருப்பித் தருவதற்கும் அந்த அதிகாரி ரூ.1.1 மில்லியன் லஞ்சம் கோரியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தொகையில், ரூ.100,000 ஏற்கனவே மே 30 ஆம் திகதியே பெறப்பட்டுவிட்டது. மீதமுள்ள ரூ.1 மில்லியன் அந்த விடுதியில் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு, லஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் அந்தப் பொலிஸ் பரிசோதகரைப் பணத்துடன் கைது செய்தனர்.


