
பன்னிரண்டு (12) பேர் உயிரிழப்பதற்குக் காரணமான ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்துச் சம்பவம் தொடர்பாக, அதன் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்றைய தினம் ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஹொரண – அங்குருவதொட்ட-வில் உள்ள செனஹசே கெடெல்லா’ முதியோர் இல்லத்தில் நேற்று (03) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 12 ஆக உயர்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் 06 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹொரண நீதவான் லக்மினி விதானகமகே சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, இன்று காலை (04) இச்சம்பவம் குறித்து நீதவான் விசாரணை நடத்தினார்.
நீதவான் முன்னிலையில் எரிந்த உடல்கள் அகற்றப்பட்டன, அவற்றுள் தீயில் இறந்த ஒரு பூனையின் உடலும் கண்டெடுக்கப்பட்டது.
இச்சம்பவம் நடந்த நேரத்தில் முதியோர் இல்லத்தில் 71 பேர் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது, தீயில் கருகி கட்டிடத்திற்குள் இருந்த 12 பேர் உயிரிழந்தனர்.
தீ விபத்தில் உயிர் தப்பிய சுமார் 50 பேர் நேற்று இரவு படகொட பாடசாலையொன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை, இலங்கை ராணுவப் பணியாளர்களின் உதவியுடன், அவர்கள் கல்பத்தவில் அமைந்துள்ள – அதே முதியோர் பராமரிப்பு நிறுவனத்தின் மற்றொரு கிளைக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டனர்.
தீ விபத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.


