தலைப்புச் செய்திகள்

பைலாவுக்கு பிணை

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுசைன் பைலா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை – லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் இன்று (31) கைது செய்தனர்.

உரிய நடைமுறையை மீறி 50 தற்காலிக களஞ்சியங்களை இறக்குமதி செய்வதற்காக, 90 மில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகையை – அவர் செலவு செய்தார் எனும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார்.

இவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம, தலா 01 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், 50,000 ரொக்கப் பிணையுடனும், அவரை விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும், சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் பயணத் தடையையும் விதித்துள்ளது.

அரச வர்த்தகக் கூட்டுத்தானத்துக்காக பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் போது, ​​சந்தேக நபர் முறையான நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டதாகவும், 2015 ஆம் ஆண்டில், நிறுவனத்திற்கு எந்தத் தேவையும் இல்லாமல் 50 தற்காலிக களஞ்சியங்களை இறக்குமதி செய்ததாகவும் லஞ்ச, ஊழல் ஆணைக்குழு கூறியுள்ளது.

அதன் மூலம் அரசுக்கு 99 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் அதற்கு சமமான நன்மை – ஒரு வெளித் தரப்பினருக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஜனவரி 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.