தலைப்புச் செய்திகள்

பேருவளை சுப்பர் மார்கட் ஒன்றில் 1.25 மில்லியன் ரூபாயை திருடிச் சென்ற தம்பதியினர்: கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பம்

பேருவளையிலுள்ள சுப்பர் மார்கட் ஒன்றிலிருந்து 1.25 மில்லியன் ரூபாய் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினரை கைது செய்வதற்கான விசாரணையை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

பேருவளை – மஹகொட, பழைய வீதியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் முகமது நாசர் வழங்கிய முறைப்பாட்டின் பேரில், இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளர் மஹகொட, சாவியா வீதியில் 03 ஊழியர்களுடன் சுப்பர் மார்கட் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் ஊழியர்கள் யாரும் போயா தினத்தன்று (06) பணிக்கு வராததால், அன்று அவர் தனியாக வேலை செய்து கொண்டிருந்தார்.

வழங்கப்பட்ட முறைப்பாட்டின் படி, மதியம் 1.20 மணியளவில், ஒரு சிறு குழந்தையுடன் வந்த நபரொருவர், 02 கிலோகிராம் எடையுள்ள 05 அரிசி பார்சல்களைக் கேட்டுள்ளார். அதே நேரத்தில் அவரின் மனைவி என்று நம்பப்படும் ஒரு பெண், ஒவ்வொன்றிலும் 15 முட்டைகள் கொண்ட 05 முட்டைப் பொதிகளைக் கேட்டார்.

முட்டைகளை பொதியிட்ட பின்னர், மேற்படி இருவரும் காணாமல் போனதைக் முறைப்பாட்டாளர் கவனித்தார்.

சிசிடிவி காட்சிகளை பார்த்ததில் செய்ததில், காசாளர் கவுண்டருக்கு அருகில் பிளாஸ்டிக் உறையில் வைக்கப்பட்டிருந்த 1.25 மில்லியன் ரூபாயை அந்த தம்பதியினர் திருடிக் கொண்டு – தப்பிச் சென்றமை தெரியவந்தது.

பேருவளை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.