தலைப்புச் செய்திகள்

பாகிஸ்தானில் நடந்த மூன்று வெவ்வேறு கார் குண்டுத் தாக்குதல்களில் 22 உயிரிழப்பு

பாகிஸ்தான் எல்லை மாகாணங்களான பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் நடந்த மூன்று தனித்தனி தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர்

தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ஒரு அரசியல் பேரணியை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர்.

மக்கள் பேரணியை விட்டு வெளியேறும்போது ஒரு வாகன நிறுத்துமிடத்தில் குண்டு வெடித்ததாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் 30 பேர் காயமடைந்தனர்.

ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள பலுசிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடந்த மற்றொரு தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

குண்டுவெடிப்புகளுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லையில் அமைந்துள்ள பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில், பலுசிஸ்தான் பிரிவினைவாத போராளிகள் செயல்பட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் நடந்த தாக்குதல்களுக்கு இவர்கள் உரிமை கோரியுள்ளனர்.

பலுசிஸ்தான் பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் வளங்கள் நிறைந்த மாகாணமாகும். ஆனால் அந்த பிராந்தியம் மிகவும் ஏழ்மையானதாக உள்ளது.

இது இவ்வாறிருக்க, வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவின் பன்னு மாவட்டத்தில் உள்ள கூட்டாட்சி தலைமையகத்தை கிளர்ச்சியாளர்கள் தாக்கியதில் குறைந்தது 06 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் தாலிபானுடன் தொடர்புடைய ஒரு குழு – இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றதாகக் கூறப்படுகிறது.