
வயதான பெண் ஒருவரிடம் – லொட்டரி சீட்டில் வென்ற ஒன்பதரைக் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை – மோசடி செய்த குற்றச்சாட்டில்,லொட்டரி விற்பனை முகவர் மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹப்புத்தளையைச் சேர்ந்த பெண், ‘தன நிதானய’ லொட்டரியின் 1630 ஆம் எண் கொண்ட ஜாக்பொட்டை வென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அவருக்கு 96,298,759.58 ரூபாய் பணம் கிடைக்கவிருந்தது.

இருப்பினும், லொட்டரி விற்பனை முகவர், இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து, பரிசுத் தொகையை மோசடியாகப் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குற்றப் புலனாய்வு பிரிவின் இரண்டு விசேட புலனாய்வுப் பிரிவுகள் நடத்திய விரிவான விசாரணையைத் தொடர்ந்து, சந்தேக நபர்களை, சிஐடியினர் கைது செய்னர்.


