
– மப்றூக் –
காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் 103 பேரை, பாசிச தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்ற துயர சம்பவத்தின் 35 ஆவது வருட நினைவுநாள் (03) இன்றாகும்.
காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுசைனியா பள்ளிவாசல் ஆகியவற்றில் இஷா நேரத் தொழுகையில் ஈடுபட்டுக் கொன்டிருந்தவர்கள் மீது, பாசிச புலிகள் 03.08.1990 அன்று துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளைக் கொண்டு நடத்திய கோரத் தாக்குதலில் 103 முஸ்லிம்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
அந்த கோர சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட 103 முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்தித்து, அவர்களின் உயிரிழப்புக்கு நியாயம் கோரும் நாளாக, ‘சுஹதாக்கள் தினம்’ எனும் பெயரில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பாசிசப் புலிகள் – காத்தான்குடிப் படுகொலையை மேற்கொள்வதற்கு 20 நாட்களுக்கு முன்னர்தான் (12.07.1990) கல்முனை – மட்டக்களப்பு வீதியால் பயணித்த முஸ்லிம்களை, குருக்கள்மடம் பிரதேசத்தில் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றனர். அவ்வாறு கொல்லப்பட்ட 170 முஸ்லிம்களை அந்தப் பகுதியிலேயே புதைத்தனர்.
காத்தான்குடி பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட படுகொலை மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பாசிசப் புலிகள் மேற்கொண்ட அனைத்துக் குற்றங்கள் தொடர்பாகவும் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்படுதல் வேண்டும் என்பதே முஸ்லிம் சமூகத்தின் வேண்டுகோளாக உள்ளது.
மேலும், குறித்த குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புபட்ட புலிகள் இயக்க முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சட்ட ரீதியாகத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையில் உயிர் தப்பியவர்களின் திகில் அனுபவங்கள் மற்றும் சாட்சியங்களுடனான வீடியோ பதிவொன்று இன்று (03) இரவு புதிது YouTube சேனலில் வெளியாகும்.
இதையும் காணுங்கள்



