தலைப்புச் செய்திகள்

நான்கு பேர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடை தொடர்பில், இலங்கையின் நிலைப்பாடு வெளியானது: கருணா அம்மான் பற்றி எதுவுமில்லை

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் முன்னாள் ராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக – ஐக்கிய ராச்சியம் தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து இலங்கை அரசாங்கம் இன்று (26) தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

நாடுகளின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயன்முறைக்கு உதவாததுடன், அதற்கு மாறாக செயன்முறையை மேலும் சிக்கலாக்குகின்றன என்று, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான ஐக்கிய ராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் – இடம் தெரிவித்துள்ளார் என,  வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கான ஐக்கிய ராச்சியத்தின் தடைகள்’ என்ற தலைப்பில் ஐக்கிய ராச்சியத்தின், வெளியுறவு, பொதுநலவாய அமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகம் (FCDO) வெளியிட்ட 2025, மார்ச் 24 எனத் திகதியிட்ட செய்தி வெளியீட்டை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு கவனத்தில் கொள்கிறது.

செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளபடி, ஐக்கிய ராச்சியத்தின் அரசானது நான்கு நபர்கள் மீது தடைகளை விதித்துள்ளது. அவர்களில் மூன்று பேர் இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் ராணுவத் தளபதிகளாவர்.

மேலும், ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகத்தின் வெளியீடானது, “இதற்குப் பொறுப்பானவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்யப்பட்ட உறுதிமொழியை” குறிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நடவடிக்கையானது, இது தொடர்பில், ஐக்கிய ராச்சியத்தின் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கையாகும். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதான சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை ஆகியவை அடங்கும் என்பதை அமைச்சு அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறது. நாடுகளின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயன்முறைக்கு உதவாததுடன், அதற்கு மாறாக செயன்முறையை மேலும் சிக்கலாக்குகின்றன.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டு வழிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன், கடந்த கால மனித உரிமை மீறல்கள் – உள்நாட்டு பொறுப்புக்கூறல் வழிமுறைகள் மூலம் கையாளப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் -இடம் இன்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் வைத்து தெரிவித்தார் என, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், கருணா அம்மான் பற்றிய எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி தடைகள் விதிக்கப்பட்ட நால்வரும் ஐக்கிய ராச்சியத்திற்கான பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய ராச்சியத்திற்குள் சொத்துக்களை சேகரித்து வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ராச்சிய அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.