தலைப்புச் செய்திகள்

சிறுவர் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் 8,746 முறைப்பாடுகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை, 2024 ஆம் ஆண்டில் சிறுவர் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக மொத்தம் 8,746 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது. இவற்றில், 580 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றில் 321 முறைப்பாடுகள் குறிப்பாக சிறுவர்கள் மீது புரியப்பட்ட கடுமையான பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றியனவாகும்.

அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகளாக – சிறுவர் பாதுகாப்பு பிரச்சினைகள் (2,746), சிறுவர் கொடுமை (1,950) மற்றும் சிறுவர் சுரண்டல் ( 229) ஆகியவற்றுடன் தொடர்புடையவையாகும்.

பாலியல் வன்புணர்வு தொடர்பில் 42 முறைப்பாடுகளும், வணிக நோக்கங்களுக்காக பாலியல் சுரண்டல் தொடர்பாக 25 முறைப்பாடுகளும் இவற்றில் அடங்குகின்றன.

ஏனைய குறிப்பிடத்தக்க முறைப்பாடுகளில் குழந்தை திருமணங்கள் தொடர்பானவை 14, இணையத்தில் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதாக அச்சுறுத்தப்பட்ட முறைப்பாடுகள் 151 ஆகும்.

மேலும் தற்கொலை முயற்சித்தமை தொடர்பில் 18 முறைப்பாடுகளும், போதைப் பழக்கம் தொடர்பில் 120 முறைப்பாடுகளும், சிறுவயது கர்ப்பங்கள் குறித்து 53 புகார்கள் முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத குழந்தைகள் தொடர்பான 39 முறைப்பாடுகளும் இவற்றில் அடங்கும்.

துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்களுக்கு சட்டரீதியான உதவியை மேம்படுத்துவதற்கான முயற்சியில், இலவச சட்ட சேவைகளை வழங்க தகுதிவாய்ந்த சட்டத்தரணிகளின் குழுவொன்றை நிறுவும் பணியில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்டு வருகிறது.