தலைப்புச் செய்திகள்

சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான, ஐக்கிய மக்கள் கூட்டணி உருவானது: ஹக்கீம், மனோ உள்ளிட்டோரும் கைச்சாத்து

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான – பரந்த அரசியல் கூட்டணியான ஐக்கிய மக்கள் கூட்டணி – இன்று (08) ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி, தயாசிறி ஜயசேகர தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் தலைமயிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அணி, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுதந்திர மக்கள் சபை மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான அணி ஆகியவை – ஐக்கிய மக்கள் கூட்டணியை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்காக, இந்தப் புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணி நாட்டின் மிகப்பெரிய கூட்டணி என்றும் இலங்கையின் வெற்றியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.