தலைப்புச் செய்திகள்

மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளராகிறார் நாமல்?

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பெயரிடப்பட வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதலில் பொதுஜன பெரமுன வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேரா – வேட்பாளராகும் முடிவிலிருந்து ஒதுங்குவதாக பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக வேட்பாளராகுவதிலிருந்து விலகும் தீர்மானத்தை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு எழுதிய கடிதத்தில் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தம்மிக்க பெரேராவின் எண்ணத்தை அவர் மாற்றுவதற்கு – சில சூழ்நிலைகள் வழிவகுத்ததாக, ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும், ராஜபக்ஷ தரப்பினரின் நெருங்கிய நபருமான உதயங்க வீரதுங்க தெரிவித்திருக்கிறார்.

இதன் விளைவாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பாக நாமல் ராஜபக்ஷ வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

”தம்மிக்க சம்மதிக்கவில்லை என்றால், எங்கள் நாமல் தயார்” என வீரதுங்க கூறியுள்ளார்.