போர்த்துக்கேய தளபதியால் வெளியேற்றப்பட்ட 04 ஆயிரம் முஸ்லிம்கள்; மட்டக்களப்பில் குடியேறிய வரலாறு

🕔 March 4, 2023

டொக்டர் எஸ். கியாஸ் – ‘அட்டாளைச்சேனையின் அரசியலும் வரலாறும்’ எனும் தொடரொன்றை எழுதி வருகின்றார். இந்த எழுத்துக்கள் ஓர் ஊர் பற்றிய வரலாற்றுடன் மட்டும் அடங்கி விடாமல் – இலங்கை முஸ்லிம்ளின் தொன்மம், தமிழர்களின் வரலாறு, முக்குவர் மற்றும் திமிலர்களுடனான தொடர்பு என பரந்து விரிகின்றது. தமது ‘வேர்’களை அறியும் ஆவலுள்ளோர் இதைப் படிக்கலாம். ஒவ்வொரு பகுதியாக இதனை ‘புதிது’ வெளியிடும். இது பகுதி – 03 ஆக அமைகிறது

– கியாஸ் சம்சுடீன் –

முற்குக வன்னிய அரசு காலத்தில் – முன்னைய மட்டக்களப்பு பாணமைப் பற்று, நாடுகாட்டுப்பற்று, அக்கரைப்பற்று, கரவாகுப்பற்று, சம்மாந்துறைப்பற்று, மண்முனைப் பற்று, ஏறாவூர் (கோறளைப்) பற்று என ஏழு குறுநில அரசுகளின் பிரதேசங்களாக அமைந்திருந்தன.

எமது அட்டாளைச்சேனை பிரதேசமும் – முன்னர் அக்கரைப்பற்று வன்னிமைகளினதும் நிலமை போடிகளினதும் ஆளுமைக்கு உட்பட்டிருந்தது.

திருகோணமலையிலும், அடங்காப்பற்று வன்னியிலும் வாழ்ந்த மக்களினுடைய வரலாறுகளை முறையே – கோணேசர் கல்வெட்டு, வையா கல்வெட்டு எனப்படும் கல்வெட்டு வகை இலக்கிய நூல்கள் கூறுவதைப் போல – பெரும்பாலும் ‘வன்னியர்’ என்ற சிற்றரசரின் ஆட்சியின் கீழ்வந்த மட்டக்களப்பின் நாடுகாடு பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களை ‘நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு’ எடுத்தியம்புகிறது.

கல்வெட்டின் ஆசிரியரைப் பற்றியோ அதன் காலத்தைப்பற்றியோ எந்த விதமான குறிப்புக்களும் காணப்படாத இந்நூலின் மொழிநடை பாமரர் மரபு வழக்காற்றில் காணப்படுவதாக கூறப்படுகிறது. கண்டி மகாராசன் பற்றியும் புலியன்தீவில் உலுவிசியென்கிற பறங்கி (கொன்ஸ்டன் டீசா) வாழ்ந்மைபற்றியும் கூறப்பட்டுள்ளமையினால் கல்வெட்டு கண்டி அரசரின் மேலாதிக்கம் மட்டக்களப்பில் நிலவியிருந்த காலத்துக்குரியது என கொள்ளலாம்.

கல்வெட்டிலே வரும் கதையம்சங்கள் எல்லாம் ராசபக்கிஷ முதலியாருடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. மேலும் அவர் அரசருடன் தொடர்புடையவராகவும் பட்டங்கட்டின முதலி ராச முத்திரைகள் பெற்றவராகவும், தளவில்விலே குடியிருந்த சம்பவம் பற்றியும் அவர் பின்பு இறக்காமத்திலே போயிருந்ததாகவும் கூறப்படுகிறது.

கல்வெட்டில் நாடு காட்டில் ஆதிக்கம் செலுத்திய வன்னியர்களைப் பற்றியும் கோவில்மேடு, பட்டிமேடு ஆகிய இடங்களிலுள்ள அம்மன் கோயில்களைப்பற்றிய சில கதையம்சங்களும், அவை தவிர நாடு காட்டுப்பற்றுக்கு குடியேறி வாழ்ந்துவந்த இஸ்லாமியக் குடிகளைப் பற்றியும் வேடர்களைப் பற்றியும் அவர்களின் தலைவர்களைப் பற்றியும் சில தகவல்கள் வந்துள்ளன.

மட்டக்களப்பில் வாழும் இஸ்லாமியர் சிலரின் முன்னோர்கள் சீத்தவாக்கையிலிருந்து குடிபெயர்ந்தார்கள் என்பது மரபு வழி வந்த கருத்து.

ஆனால் நாடு காட்டுப்பற்றுக்கு குடியேறிவந்த முஸ்லிம்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதற்கான தரவுகளில்லை.

அக்கரைப்பற்றில் அதிகளவில் பணிய வீட்டுக்குடியினரும் , குறிப்பிடத்தக்க அளவு பொன்னாச்சி குடியினரும் காணப்படுவதும், கல்வெட்டில் குறிப்பிடப்படும் எந்த குடியினரும் அட்டாளைச்சேனையில் இல்லாதிருப்பதும் அவர்கள் அட்டாளைச்சேனையில் குடியேறவில்லை என்பதையும் மாறாக அக்கரைப்பற்றிலும் வேறு சில கிராமங்களிலும் குடியேறியுள்ளனர் என்பதையும் காட்டுகிறது.

ஜெனரல் கொன்ஸ்டன் டீசா (போர்த்துக்கேயத் தளபதி) வெளியேற்றிய 4000 முஸ்லிம்களும் மட்டக்களப்பில் குடியேறிய சம்பவம், முஸ்லிம்கள் குடியேற்றத்தின் இறுதிக்கட்டமாகும். இவர்கள் 1626 இல் இங்கு வந்தனர். பொன்னாச்சி குடியாராகிய அபூபக்கரை தலைவராகக் கொண்ட முஸ்லிம்களின் 7 குடிகள் பற்றி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. பொன்னாச்சி குடியை தொடர்ந்து வரிசைநாச்சிகுடி, முகாந்திரநாச்சி குடி, கிணிக்கருதன் குடி, மாலைகட்டி குடி, பணிய வீட்டுக்குடி என்ற ஏழுவகை இஸ்லாமியர் குடிகளும் வந்து குடியேறி வாழ்ந்ததாக தகவல்கள் தரப்படுவதால், அவர்கள் குடி வழி முறை பின்பற்றப்படும் பிரதேசமான புத்தளத்திலிருந்து வந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

புத்தளத்தில் மதம் மாறிய முற்குவரில் ஒரு பகுதியினர் கல்முனைப் பகுதியிலும் குடியேறினர் என்கிறார் வரலாற்றாசிரியர் எம்.டி. ராகவன். அவர்களில் ஒரு பகுதியினர்தான் பரவணிக் கல்வெட்டில் கூறப்படும் அபூபக்கரும் ஏழு குடியாருமாக இருக்க வேண்டும்.

நாடுகாட்டிலே இடம்பெற்ற பல ஊர்கள், வயல் வெளிகள் ஆகியவற்றின் பெயர்களும் கல்வெட்டிலே இடம்பெற்றுள்ளன . பட்டிய வத்தவளை, வாடிமுனை, பாமங்கை, கல்மடு, கோவில் மேடு, பட்டிமேடு, மேட்டு வெளி, பள்ளவெளி, வேகாமம், வலிப்பத் தான்சேனை, கடவத்தை வெளி, திவிளானை வெளி, பொத்தானை வெளி, வம்மியடி வயல், பட்டிப்பளை, அணுக்கன் வெளி, சிங்கார வத்தை, நாதனை போன்ற இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேற் குறிப்பிட்ட வரலாற்று மூலாதாரங்கள் மற்றும் சம்பவங்கள் பற்றிய குறிப்புகள் தவிர, வரலாற்றை அறிய வேறுசில ஆய்வு முறைகளும் எமக்கு உதவுகின்றன. வேர்சொல் ஆய்வு முறை அல்லது இடப்பெயர் ஆய்வு (இடங்களின் காரணப் பெயர் ) என்பது இன்றைய வரலாற்று ஆய்வுகளில் ஒரு முக்கிய கூறாகவே கொள்ளப்படுகின்றது.

அட்டாளைச்சேனை என பெயர் வரக்காரணம் – தற்பொழுது அக்கரைபற்று என அழைக்கப்படும் நகர் – கருங்கொடி வெட்டிக் குடியேறியதால் ‘கருங்கொடித்தீவு’ என்ற ஆதிப் பெயர் கொண்டும், நிந்தமாக கொடுத்த ‘நிந்தவூர் பற்று’க்கு அடுத்ததாக களியோடை ஆற்றின் அக்கரையிலுள்ள பற்று எனப் பொருள்படும் ‘அக்கரைப்பற்று’ எனும் இடையில் நுழைந்த இரு காரணப் பெயர்களை இடப்பெயாராகக் கொண்டிருக்கும் அக்கரைப்பற்று போலவே, ஆதி காலத்தில் மிருகங்களிடமிருந்து பாதுகாப்புப்பெற உயர்ந்த மரங்களில் சேனைக் காவலுக்குரிய ‘அட்டாளை’ எனும் காவல் பரண் கட்டி சேனைப்பயிற் செய்கை செய்ததால் ‘அட்டாளைச்சேனை’ என்ற பெயர் வழங்கியதாகத் தெரிகிறது.

அட்டாளைச்சேனையின் தொன்மையையும் முதல் குடியேற்றமும் எப்போது நடந்தது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள போதிய வரலாற்று மூலாதாரங்கள் மற்றும் ஆவணங்கள் கிடைக்காத போதும், அட்டாளைச்சேனை கிராமம் முன்னர் கருங்கொடித்தீவு என அழைக்கப்பட்ட அக்கரைப்பற்றுக்கு முந்தியது என்பதே பலரினதும் அபிப்பிராயம்.

அத்துடன் கருங்கொடித்தீவின் ஆரம்பகால குடியேற்றம் அட்டாளைச்சேனையிலிருந்தும் நடைபெற்றதாக குறிப்புகள் காணப்படுகிறன. இதேபோலவே அட்டாளைச்சேனையின் குடியேற்றம் திருக்கோவில், வெல்லஸ்ஸ, காத்தான்குடி, கரவாகு, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களிலிருந்தும் நடைபெற்றுள்ளது.

எனவே மேற் குறிப்பிட்ட ஊர்களின் வரலாற்றை ஆய்வு செய்வதனாலும் எமதூரின் தொன்மையை அறியலாம்.

(இன்னும் வரும்)

முன்னைய பகுதி (02) : லெப்பை, மரைக்காயர், மாப்பிளை பரம்பரை: காயல்பட்டினம் மற்றும் கேரளாவிலிருந்து இலங்கை வந்த கதை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்