
– முனீரா அபூபக்கர் –
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களினால் வீடுகள் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு, அடுத்த ஒரு வருடத்துக்குள் உரிமைப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு – அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார்.
அந்த உறுதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பான பிரச்சினைகளை நிறுவன மட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் தீர்த்து வைக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார். தேவைப்பட்டால் இது தொடர்பில் சட்டங்களை திருத்துமாறும் அவர் கூறினார்.
பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கப்படாத வீட்டு உரிமையாளர்களுக்கு – உரிமைப் பத்திரங்களை விரைவாக வழங்குவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனத்தில், அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்குவது துரிதப்படுத்தப்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை உரிமைப் பத்திரம் பெறாத அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் மற்றும் வீட்டு பயனாளிகளுக்கு உரிமைப் பத்திரம் வழங்குவதில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை பெறுவதற்காக 11 பேர் கொண்ட குழுவையும் ஜனாதிபதியின் செயலாளர் நியமித்துள்ளார்.
இதுவரை உரிமப் பத்திரம் பெறாத அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் மற்றும் வீட்டு பயனாளிகளுக்கு உரிமைப் பத்திரம் வழங்குவதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளைப் பெறுவதற்காக 11 பேர் கொண்ட குழுவையும் ஜனாதிபதியின் செயலாளர் நியமித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் முக்கிய நிறுவனங்களாக – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகியவை உள்ளன.
இந்த மூன்று நிறுவனங்களாலும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 32,933 ஆகும்.
இதுவரை 10,625 வீட்டு உரிமையாளர்களுக்கு மட்டுமே உரிமை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த நிறுவனங்களால் வழங்கப்பட வேண்டிய உரிமைப் பத்திரங்களின் எண்ணிக்கை 22,308 என இந்தக் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.
நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 1,326 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அதில் 545 பயனாளிகளுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்த வருமானம் பெறுவோர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை 14,607 ஆகும். அந்த வீடுகளில் சுமார் 12,000 குடும்பங்களில் பயனாளிகள் குடியேறியுள்ளனர். ஏறக்குறைய 80 பேருக்கு உறுதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் வீடு கூட்டு ஆதனம் என்பதால், அனுமதி கிடைக்காமை போன்ற பிரச்சினைகள் உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர இங்கு தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் சரண கருணாரத்ன; சுமார் 08 வருடங்களாக கூட்டு ஆதனம் தொடர்பான சட்டம் திருத்தப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறினார். அதற்காக நீதி அமைச்சு மூலம் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தாலும் அது தற்போது செயலிழந்து இருக்கின்றது என்றும் தலைவர் தெரிவித்தார்.
நீதி அமைச்சோடு கலந்துரையாடல்களை துரிதப்படுத்தி சட்டத்தைத் திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இதன்போது அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் கே.ஏ. திரு.ஜனக – அதிகார சபையின் கீழ் 108 வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார். 17,000 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 10,000 பத்திரங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும் உறுதிப்பத்திரம் வழங்குவது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் கே.ஏ. ஜனாக, அதிகார சபையின் கீழ் 108 வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார். அதில் 17,000 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 10,000 உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாக பொது முகாமையாளர் தெரிவித்தார். மேலும் உரிமைப் பத்திரம் வழங்குவது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.
வீடொன்றைப் பெற்ற ஒருவருக்கு அந்த வீட்டின் உரிமைப் பத்திரத்தை வழங்குவது – சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரின் பொறுப்பாகும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு வலியுறுத்தினார்.
நிறுவன மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு உள்ளக முறைமையின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், தேவையான கொள்கை முடிவுகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறிய அமைச்சர், உரிமைப் பத்திரம் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால், அதனை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
எனவே அடுத்த ஒரு வருடத்திற்குள் அனைவருக்கும் உரிமைப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.



