மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை: கீழமை நீதிமன்றின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

🕔 August 23, 2022

லேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் நஜிப் ரஸாக் தாக்கல் செய்த இறுதி மேல்முறையீட்டு மனுவில் தனக்கு விதிக்கப்படும் தண்டனையை நிறுத்திவைக்க சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆயினும் அதை மலேசிய உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

69 வயதாகும் நஜிப் ரஸாக், 1எம்டிபி என்ற மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனலிடமிருந்து சுமார் 10 மில்லியன் டொலர்களை சட்டவிரோதமாகப் பெற்றதாக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடரப்பட்ட வழக்கில் அவரை குற்றவாளி என்று கீழமை நீதிமன்றம் அறிவித்தது. அந்த வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நஜீப் ரஸாக், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.

அந்த வழக்கில் தன்னை குற்றமற்றவர் என்று நஜிப் தரப்பில் வாதிடப்பட்டது. இருந்தபோதும், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட், நஜிப் ரஸாக்குக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் (46.84 மில்லியன் டொலர்) அபராதமும் விதித்துள்ளார்.

“இந்த வழக்கின் நஜிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான அவரது தரப்பு வாதங்கள், இயல்பாகவே சீரற்றதாகவும் நம்ப முடியாததாகவும் இருந்தன. சந்தேகத்தின் பலனை அது நஜிப் தரப்புக்குத் தரவில்லை. மேலும், இந்த தண்டனை அதிகமானதாகவும் இல்லை என கருதுகிறோம்” என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது நஜிப் முன்வரிசையில் அமர்த்தப்பட்டிருந்தார். அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் மூன்று குழந்தைகள் அவருக்குப் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

முன்னதாக, இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கும் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் இடம்பெற்றிருந்த தலைமை நீதிபதியை மாற்ற வேண்டும் என்று நஜிப் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கை தாமதப்படுத்தும் அவரது கடைசி முயற்சியாக இந்த உத்தி பார்க்கப்பட்டது. ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை.

இந்த நிலையில், தீர்ப்பு வெளிவரும் சில நிமிடங்களுக்கு முன்பாக பேசிய நஜிப், “எனது சார்பில் மேல்முறையீட்டு வழக்கில் வாதிடுவதற்கு புதிய வழக்கறிஞர்கள் குழுவை நியமிக்க ஏதுவாக மேலும் இரண்டு மாதங்களுக்கு வழக்கை ஒத்திவைக்க கேட்டிருந்தேன். ஆனால், அநீதியால் பாதிக்கப்பட்டவனாகி இருக்கிறேன்,” என்று கூறினார்.

“மிகவும் நியாயமற்ற முறையில் எனக்கு எதிராக வலிமை வாய்ந்த நீதித்துறை நடந்து கொண்டதாக மிக மோசமான உணர்வு எனக்கு ஏற்படுவதாக உணர்கிறேன்” என்றும் நஜிப் ஜங் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்