கத்திக் குத்துக்கு ஆளான சல்மான் ருஷ்தி; பேச முடியாத நிலை: கண் ஒன்றை இழக்கக் கூடும்

🕔 August 13, 2022

த்திக் குத்துக்கு ஆளான சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்தி, பேச முடியாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஒரு கண்ணை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அமெரிக்காவின் – நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்ட பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருப்பதாகவும் பேச முடியாத நிலையில் இருப்பதாகவும் அவரின் தரப்பு கூறியுள்ளது.

‘சாத்தானின் வசனங்கள்’ என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, நியூயார்க்கில் ஒரு மேடையில் வைத்து நேற்று கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டார்.

‘புக்கர்’ பரிசு வென்றவரான இவர், லாப நோக்கற்ற ஷட்டாக்குவா நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு ஆளானார்.

அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த நபர், திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டியை கழுத்துப் பகுதியில் குத்தித் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அதனையடுத்து அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ருஷ்டியின் கழுத்தின் வலது பக்கம் உட்பட பல இடங்களில் அவர் கத்திக் குத்து காயங்களால் அவதிப்பட்டதாக மருத்துவர் ரீடா லிண்ட்மேன் என்பவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேடையில் சரிந்த பகுதியில் ரத்தம் பீறிட்டு காணப்பட்டது. அந்த நேரத்தில் ருஷ்டி உயிருடன் இருப்பதாகத் தோன்றியது. அருகே இருந்தவர்களும் ‘அவருக்கு நாடித் துடிப்பு உள்ளது’ என்று குரல் கொடுத்தனர், என்று அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்து சல்மான் ருஷ்டியை தாக்கிய நபர் பிடிபட்டுள்ளார். அவரது பெயர் ஹாதி மட்டார். நியூஜெர்சியில் வசிப்பவர் எனத் தெரியவந்துள்ளது.

சல்மான் ருஷ்தியை தாக்கியதாகக் கூறப்படும் ஹாதி

மேடையை நோக்கி ஓடிச் சென்ற அந்த நபர் – சல்மான் ருஷ்டியையும் அவரைப் பேட்டி எடுத்த நபரையும் கத்தியால் குத்தியதாக நியூயார்க் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பேட்டி எடுத்தவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த ருஷ்டிக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. “அவர் ஒரு கண்ணை இழக்கக்கூடும். கையில் உள்ள நரம்புகள் அறுபட்டிருக்கின்றன. கல்லீரல் சேதமடைந்திருக்கிறது” என அவரது முகவர் ஆண்ட்ரூ வெஸ்லி கூறியுள்ளார்.

அவர் தாக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது பற்றி இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. தாக்கியவரின் பையில் இருந்த மின்னணு சாதனங்களை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் ருஷ்தி

Comments