போதைப் பொருள் வர்த்தகர்களின் பிடிக்குள் நகர்ப்புற சிறுவர்கள்; தடுத்து நிறுத்த அரசு தீவிர முயற்சி: அமைச்சர் பிரசன்ன

🕔 August 9, 2022

– முனீரா அபூபக்கர் –

கர்ப்புற குடியிருக்களை அண்மித்து வாழுகின்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து செயல்படுகின்ற போதைப்பொருள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு, அரசு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (08) தெரிவித்தார்.

தேவைப்பட்டால் அதற்கான புதிய சட்டத்தை உருவாக்கவும் தயார் எனவும் அவர் கூறினார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ், நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் – பொரல்ல அக்குவனாஸ் உயர் கல்வி நிறுவனத்துடன் இணைந்து, நகர்ப்புறத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் சிறுவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 03 மாத ஆங்கில மொழிப் பாடநெறியை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் வைபவத்திலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

ஆங்கிலக் கல்விக்காக லட்சக் கணக்கில் செலவு செய்யும் அதிகார சபை

இந்தப் பாடநெறியை பயிலும் ஒருவருக்காக நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையால் மாதாந்தம் 15,000 ரூபா செலவிடப்படுகிறது. அதற்கேற்ப இந்தப் பாடநெறிக்காக ஐந்து லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை செலவிடப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வில் பாடநெறியை நிறைவுசெய்த 33 சிறுவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நகர்ப்புற குறைந்த வருமானம் பெறும் மக்களை இலக்கு வைத்து தற்போது நடைமுறையிலுள்ள செளபாக்ய பிரஜா சக்தி, செளபாக்ய சவிபல, செளபாக்ய நன பல மற்றும் செளபாக்ய திவிவருன ஆகிய வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்தோடு இவற்றில் ஏற்கனவே போதைப்பொருள் மறுவாழ்வுத் திட்டம் மற்றும் குடும்ப சுகாதார ஊக்குவிப்பு வேலைத்திட்டம், நிலையான சுற்றுச் சூழல் ஊக்குவிப்பு திட்டம், குறுகிய/ சிறிய அளவிலான தொழில் முனைவோரை ஊக்குவிக்க பயிற்சிப் பட்டறைகள், நிதி உதவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்குதல், அவர்களுக்கான சந்தை வாய்ப்புகளை அறிமுகப்படுத்துதல், இளைஞர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிகழ்ச்சிகள், பல்லின மத செயற்பாடுகள், கலாசார, இலக்கிய மற்றும் கலை ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள், உளவியல் – சமூக ஆதரவு திட்டங்கள் மற்றும் வீட்டுத் தோட்ட பயிர் செய்கை நிகழ்ச்சிகள் ஆகியவையும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

பத்தரமுல்ல, செத்சிறிபாய முதலாம் கட்டடத்தில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

தேவைப்பட்டால் புதிய சட்டங்களைக் கொண்டு வருவோம்

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

“நகர்ப்புற குறைந்த வருமானம் பெறும் குடியிருப்புக்களை அண்மித்து போதைப்பொருள் பிரச்சினை மற்றும் சமூக விரோதச் செயல்கள் அதிகமாக இருக்கின்றன. போதைப்பொருள் வர்த்தகர்கள் தற்போது சிறுவர்களை தமது பிடிக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் இருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்காக அரசு அர்ப்பணிப்புடன் வேலை செய்கின்றது.

போதைப் பொருள் பாவனையின் பாதகங்களைப் பற்றி பொலிஸ் மற்றும் மத வழிபாட்டு நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டங்களை நாங்கள் தற்போது செயற்படுத்தி வருகின்றோம். போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதற்காக பாதுகாப்புத் தரப்புக்கு ஜனாதிபதி கட்டளை இட்டுள்ளார்.

நகர்ப்புற குடியிருப்புக்களை அண்மித்து போதைப்பொருள் குற்றச் செயல்களை தடுப்பதற்காக நாங்கள் எதிர்காலத்தில் விஷேசமான வேலைத் திட்டங்களை செயற்படுத்துவோம். தேவைப்பட்டால் அதற்காக புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

நாம் 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். இன்றைய குழந்தைகள் தொழில்நுட்பத்துடன் வாழ்கின்றனர். உலகை வெல்ல நாங்கள் தொழில்நுட்பத்துடன் இணைந்து முன்னேற வேண்டும். தொழில்நுட்பத்தை மறந்து வேலை செய்ய முடியாது.

தொழில்நுட்பத்தை வரையறையுடன் பயன்படுத்த வேண்டும்

எங்களது தாய் மொழியான சிங்கள மொழியைக் கற்றுக் கொள்கின்ற அதேநேரம் தொழில்நுட்ப உலகை வெற்றி கொள்வதாக இருந்தால் நாங்கள் கட்டாயம் ஆங்கில மொழியையும் கற்க வேண்டும். அந்தக் காலத்தில் எங்களுக்கு எழுதுவதற்கு வரையறுக்கப்பட்ட பக்கங்களை உடைய புத்தகங்கள் கிடைத்தன. ஆனால் இன்றைய தலைமுறைக் குழந்தைகள் இன்று வேலை செய்வது லெப்டெப் மூலம், டெப்கள் மூலம், கணனி மூலம்.

இந்த நடத்தை மாற்றம் எங்களுடைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் காரணிகளையும் நாளாந்த வாழ்க்கை முறைகளையும் மாற்றியமைத்துள்ளன. நாங்கள் இவை அனைத்தையும் வரையறைகளுடன் செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எங்களுக்கு மட்டுமன்றி நாட்டுக்கும் அழிவு காலம் ஏற்படும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் புதிய அரசாங்கம் எப்போதும் இந்த குழந்தைகள் பரம்பரையை புதிய உலகுக்குப் பொருத்தமான வகையில் வடிவமைப்பதற்கு முயற்சி எடுக்கிறது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு அதற்காக விஷேட  வேலைத்திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக நகர்ப்புறக் குழந்தைகளின் ஆங்கில மொழியை வளர்த்தெடுப்பதற்கு நாங்கள் தற்போது வேலைத்திட்டங்கள் பலவற்றை செயற்படுத்தி வருகிறோம். அவற்றுள் மிக முக்கியமான வேலைத்திட்டமாக ஆங்கில மொழியறிவைக் கொடுக்கும் வேலைத்திட்டம் இருக்கிறது.

மேல் மாகாணத்தில் வாழுகின்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக முழுமையாக இலவசமாக இந்த பாடநெறி நடைபெறுகின்றது. இந்த மக்களுக்கூடாக நவீன உலகை வெற்றி கொள்ளக் கூடிய தலைமுறை ஒன்றை உருவாக்குவதே எங்களது நோக்கமாகும்” என்றார்.

ஆங்கிலம் தவறவிடப் படக் கூடாது: அதிகார சபையின் தலைவர்

இங்கு கருத்துத் தெரிவித்த நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் பிரியந்த ரத்நாயக்க;

“எங்களது தாய் மொழி சிங்களம். என்றாலும் சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு இந்த மொழி போதுமானதாக இல்லை. இன்றைய திகதியில் உலகை வெற்றி கொள்வதற்காக நாங்கள் கட்டாயமாக ஆங்கில மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். பாடசாலைகளில் ஆங்கில மொழி கற்பிக்கப்பட்டாலும் பலருக்கு ஆங்கில மொழியில் எழுதுவதற்கோ கதைப்பதற்கோ உரிய திறனில்லை. நாங்கள் ஆங்கில மொழிக்குப் பயப்படுகிறோம். ஆங்கில மொழிப் பாடம் தவறவிடப்பட்டால் எங்களுடைய வாழ்க்கையே தவறவிடப்படும். 

அதனால் நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை தன்னுடைய பணத்தை செலவு செய்து, நகர்ப்புற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் குழந்தைகளுக்காக இந்த ஆங்கிலப் பாடநெறியை இலவசமாக நடாத்துகின்றது. அதே போன்று நகர்ப்புற மக்களின் பொருளாதாரம் மற்றும் ஆன்மீக அபிவிருத்திக்காகவும் விஷேடமான வேலைத்திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம்” என்றார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் ரத்நாயக்க, நகர அபிவிருத்தி அதிகார சபை தலைவர் நிமேஷ் ஹேரத், நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் விஜயானந்த ஹேரத் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்