ஜனாதிபதி – ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு இடையில் சந்திப்பு: சர்வ கட்சி அரசாங்கத்துக்கும் அழைப்பு

🕔 August 5, 2022

திர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (05) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கலந்துரையாடியது.

அனைத்துக் கட்சி அல்லது பல்கட்சி அரசாங்கம் அல்லது வேலைத்திட்டத்திற்கான முன்னோக்கிய வழி குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாக அந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கி மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், றிசாட் பதியுதீன். வி. ராதாகிருஷ்ணன், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அந்தக் கட்சியின் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு ஆகியோர் கலந்துகொண்டனர்.

அவசரகால நிலையை நீக்கி, ‘அரகலய’ கைதிகளை விடுவித்து, ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டுவதையும் தன்னிச்சையாக கைது செய்வதையும் நிறுத்துமாறும் இதன்போது தாம் வேண்டிக் கொண்டதாகவும் ஹர்ஷ டி சில்வா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியை முறைப்படி அழைத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்