அட்டாளைச்சேனையில் மாடறுக்கும் இடத்தை பிரதேச சபை இழுத்து மூடியது: அதிக விலைக்கு இறைச்சி விற்கப்பட்டமைக்கு எதிராக தவிசாளர் அதிரடி

🕔 August 5, 2022

– அஹமட் –

ட்டாளைச்சேனையில் பிரதேச சபையின் உத்தரவை மீறி, அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்கப்பட்டமையினால், இன்றைய தினம் மாடறுக்கும் இடத்தை (கொல் களம்) பிரதேச சபை இழுத்து மூடியது.

இதனால் இன்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனையில் மாட்டிறைச்சிக் கடைகள் எவையும் திறக்கப்படவில்லை.

ஆயினும் இதனையும் மீறி திறக்கப்பட்ட இறைச்சிக் கடையொன்றினை பொலிஸார் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா களத்தில் நின்று மூட வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஒரு கிலோ மாட்டிறைச்சி 1600 ரூபாவுக்கு விற்பதென, பிரதேச சபையுடன் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு மாறாக, அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்கப்பட்டது.

ஒரு கிலோ மாட்டிறைச்சி 2200 ரூபா வரைக்கும் – பல இடங்களில் விற்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சமூக ஊடகங்களில் பொதுமக்கள் தமது கண்டனங்களைப் பதிவு செய்திருந்த நிலையில், இவ்விவகாரத்தை ‘புதிது’ செய்தித்தளம் நேற்று தவிசாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றது. இதன்போதே மாடறுக்கும் இடத்தை மூடும் தீர்மானத்தை ‘புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் தெரிவித்தார்.

இந்தப் பின்னணியில் இன்று பிற்பகல் மாட்டிறைச்சியின் விலை தொடர்பில் தீர்மானமொன்றினை எடுக்கும் பொருட்டு, தவிசாளருடன் கலந்துரையாடுவதற்காக மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும் கடை உரிமையாளர்களில் அதிகமானோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள வருகை தரவில்லை என அறியக் கிடைக்கிறது.

இதேவேளை, பிரதேச சபைத் தவிசாளருடன் மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்கள் பேசி – இறைச்சி விலை தொடர்பான தீர்மானமொன்றினை எடுக்காத வரையில், மாட்டிறைச்சிக் கடைகளை அட்டாளைச்சேனையில் திறக்க அனுமதிப்பதில்லை என, தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறிவுறுத்தல்களை மீறி, அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை: கொல்களத்தை மூடுவதாக தவிசாளர் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்