அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறிவுறுத்தல்களை மீறி, அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை: கொல்களத்தை மூடுவதாக தவிசாளர் தெரிவிப்பு

🕔 August 4, 2022

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மாட்டிறைச்சிக் கடைகள், பிரதேச சபையுடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு மாறாக அதிக விலையில் இறைச்சியினை விற்பனை செய்வதால், இறைச்சிக் கடைகளை மூடும் பொருட்டு, மாடறுக்கும் இடத்தினை (கொல்களம்) மூடி விடத் தீர்மானித்துள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஒரு கிலோ மாட்டிறைச்சி 2200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பாக மக்களிடமிருந்து எழுந்துள்ள புகார்கள் குறித்து, தவிசாளரிடம் பேசிய போதே அவர் இதனைக் கூறினார்.

“பிரதேச சபையுடன் மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்கள் உடன்பட்டமைக்கு அமைவாக – ஒரு கிலோ மாட்டிறைச்சினை 1600 ரூபாவுக்கே விற்பனை செய்ய வேண்டும். ஆனால் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய விலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். இது குறித்து பல்வேறு தடவை அவர்கள் அறிவுறுத்தப்பட்டும் திருந்தவில்லை”.

“எனவே, பிரதேச சபைக்குச் சொந்தமான மாடறுக்கும் இடத்தை நாளையிலிருந்து மூடிவிடத் தீர்மானித்துள்ளோம். ஒரு கிலோ மாட்டிறைச்சியை 1600 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு உடன்பட்டால் மட்டுமே மாடறுக்கும் இடம் திறந்து கொடுக்கப்படும்” என தவிசாளர் இதன்போது கூறினார்.

அதேவேளை பிரதேச சபையுடன் உடன்பட்டுக் கொண்ட விலைகளைக் கொண்ட பட்டியலை மாட்டிறைச்சிக் கடைகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும், அனைத்துக் கடைக்காரர்களும் டிஜிட்டல் தராசு பாவிக்க வேண்டுமெனவும் தவிசாளர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த நடைமுறைகளைத் தாம் பின்பற்றுவதாக மாட்டிறைச்சிக் கடைக்காரர்கள் பிரதேச சபையுடன் உடன்பட்டுள்ளதாகவும், பல தடவை இந்த நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அவர்களுக்கு உத்தரைவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே, ஒரு கிலோ மாட்டிறைச்சியை 1600 ரூபாவுக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட மேற்படி முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக மாட்டிறைச்சிக் கடைக்காரர்கள் உத்தரவாதமளித்தால் மட்டுமே, மாடறுக்கும் இடத்தை திறந்து கொடுத்து, அவர்கள் வியாபாரம் செய்வதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் தவிசார் அமானுல்லா மேலும் தெரிவித்தார்.

Comments