கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு: மேலதிக தகவல் வெளியானது

🕔 August 4, 2022

ல்கிசை நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்கிசை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி சீத்மா பெர்னாண்டோ இது தொடர்பாக தெரிவிக்கையில்; வழக்கு ஒன்றுக்காக ஆஜராகியிருந்த சாட்சி ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

நீதிமன்ற அறைக்குள் இருந்த மக்களுடன் சந்தேக நபர் இருந்ததாகவும், சாட்சி கூண்டை நெருங்கி சாட்சியை நோக்கி சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதும் சந்தேக நபரால் சாட்சியை காயப்படுத்த முடியாததால், நீதிமன்ற அறையை விட்டு வெளியேறி, வளாகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அச்சுறுத்தும் வகையில் வானத்தை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து நீதிமன்ற வழக்கு சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி சீத்மா பெர்னாண்டோ கூறினார்.

இதேவேளை சாட்சிக்கு ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments