ஒரே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவருக்கு பதவி, இன்னொருவர் கைது: ரணிலின் கோர இரட்டை முகம்

🕔 August 4, 2022
ஜோசப் ஸ்டாலின் கலந்து கொண்ட அதே ஆர்ப்பாட்டத்தில் சமன் ரத்னபிரிய

– அஸீஸ் நிஸாருத்தீன் –

லங்கை ஆசிரியா் சங்கத்தின் செயலாளா் ஜோசப் ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த மே மாதம் 28ம் திகதி ‘அரகலய’ 50ம் நாள் நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதை காரணம் காட்டியே – பொலிஸாா் இவரை கைது செய்துள்ளனர்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ரணிலுடைய, ஐக்கிய தேசிய கட்சியின் சுகாதார தொழிற் சங்கத் தலைவா் சமன் ரத்னபிாியவும் கலந்து கொண்டாா். ஆனாலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சமன் ரத்னபிாிய – ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலினை கைது செய்துள்ள ரணிலின் காவல்துறை, ரத்னபிரியவையும் கைது செய்யவேண்டும். ஆனால் அவருக்கு உயர் பதவி ஒன்றை வழங்கி ரணில் ஆசிர்வதித்துள்ளார்.

இது தவிர, கொரோனா காலத்தில் 2021ம் ஆண்டு ஆர்ப்பாட்டம் செய்த குற்றத்துக்காக ஜோசப் ஸ்டாலின் – கோட்டாபய அரசாங்கத்தில் கைது செய்யப்பட்ட போது – ரணில் கொதித்தெழுந்தார். ஜோசப் ஸ்டானின் கைதுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரலெழுப்பினார்.

“ஜோசப் போன்றவா்களை கைது செய்வதால் இந்நாட்டுக்கு சர்வதேசத்தின் உதவிகள் கிடைக்காமல் போகும், ஜிஎஸ்பி பிளஸ் சலுகையும் இல்லாமல் போகும்” என்று நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு கோட்டா அரசாங்கத்தை கடுமையாக ரணில் விமா்சித்திருந்தார்.

ஆனால் அவரே இன்று பிரபல தொழிற் சங்கவாதியான ஜோசப் ஸ்டாலினை கைது செய்து – ஜனநாயத்துக்கு எதிராக தனது மற்றுமொரு நடவடிக்கையை அரங்கேற்றியுள்ளார். ‘அரகலய’ போராட்டத்தின் மூலம் தந்திரமாக ஆட்சியைப் பிடித்துக் கொண்ட ரணில், பதவிப் பித்து தலைக்கேறி செயற்பட்டு வருகிறார்.

நிறைவேற்று அதிகாரம் ரணிலுக்கு கிடைத்திருப்பது ‘குரங்கின் கைக்கு கத்தி ஒன்று கிடைத்ததற்கு’ ஒப்பானதாக பார்க்கப்படுகிறது. போராட்டக்காரர்களை நசுக்கும் தீவிர ஜனநாயக விரோத நடவடிக்கையில் ரணில் ஈடுபட்டுள்ளார்.

ரணிலின் இரட்டை முகமும், அவாின் ஜனநாயக விரோத செயற்பாடுகளும் நாளுக்கு நாள் அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.

மே 28 அன்று ஜோசப் ஸ்டாலின் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம்

Comments