ரணில் இடத்துக்கு நியமிக்கப்பட்ட வஜிர, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்

🕔 July 27, 2022

க்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தன இன்று (27) காலை நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க  ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமையை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த வெள்ளிக்கிழமை (22) இரவு வெளியிடப்பட்டது.

வஜிர அபேவர்த்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராகப் பதவி வகிக்கின்றார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று அமைச்சர் பதவி வகித்த வஜிர அபேவர்தன, இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் – ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக காலி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்விடைந்தார்.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த பொதுத் தேர்தலில் தேசிய ரீதியாகப் போட்டியிட்ட போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கூட வென்றெடுக்கவில்லை. இந்த நிலையில் அந்தக் கட்சிக்கு தேசியப்பட்டியல் ரீதியாக – நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்று கிடைத்தது. அதற்கு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.

இந்தப் பின்னணியில், ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ – நாட்டை விட்டுத் தப்பிச் சென்று, அவரின் பதவியை ராஜிநாமா செய்தமையினை அடுத்து, நாடாளுமன்றம் – ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தது.

இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை (21) ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதன் காரணமாக ரணில் விக்ரமசிங்க வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி  வெற்றிடமானது.

இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில், ரணில் விக்ரமசிங்க தலைமை வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து, அதன் தவிசாளர் வஜிர அபேவர்தன நாடாளுமுன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்