கோட்டாவின் வீழ்ச்சி, புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில், தூரப் பிரதேச மக்களின் கருத்துக்கள் என்ன?

🕔 July 18, 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக)

லங்கையில் பாரியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ‘அசைக்க முடியாத ஆட்சி’ என்று ஒரு காலகட்டத்தில் – பலராலும் பேசப்பட்ட ராஜபக்ஷவினரின் அதிகாரமானது, மக்கள் போராட்டம் மூலமாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும், நாட்டின் அரசியல் – இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.

‘கோட்டா வீட்டுக்கு போ’ போராட்டத்தின் விளைவாக, இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ள நிலையில், ‘ரணில் வீட்டுக்குப் போ’ (Ranil Go Home) எனக் கூறி, போராட்டக்காரர்கள் தமது கோஷத்தை மாற்றியிருக்கின்றனர்.

மஹிந்த, பசில், கோட்டா என – ராஜபக்ஷவினரை அதிகாரத்திலிருந்து வீழ்த்துவதற்கு, கொழும்பு – காலிமுகத்திடலில் ஒன்று திரண்ட மக்கள் பெரும் பங்காற்றினார்கள். ஆனால், தலைநகருக்கு வெளியேயும் தொலைதூர பிரதேசங்களிலும் உள்ள மக்களில் அதிகமானோர், இந்த விவகாரங்களை பெரும்பாலும் ஊடகங்கள் வழியாகவே அறிந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில், ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ ராஜிநாமா செய்தமை, அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி தேர்வு போன்றவற்றை, தலைநகரிலிருந்து மிகவும் தூரத்திலுள்ள மக்கள் எப்படிப் பார்க்கின்றார்கள்? அவர்களின் கருத்துக்கள் எவ்வாறு உள்ளன என்பதை தொகுத்து பிபிசி தமிழ் இங்கே வழங்குகிறது.

கோட்டாவின் முடிவு – மக்களின் சாபம்

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டமையினை, அவர் செய்த பாவத்துக்கான தண்டனையாகவே தான் பார்ப்பதாகக் கூறுகின்றார், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த எஸ். ஹரி பிரதாப்.

ஹரி பிரதாப்

“இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை அவர் கொன்றார். இறந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு எவ்வளவு மன வலி இருந்திருக்கும். அவர்களின் சாபம்தான் அவருக்கு இப்படி நடந்துள்ளது என நான் நம்புகிறேன்” எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இறுதி யுத்தத்தில் இறந்த மக்களின் கதறலும் அழுகையும் கண்ணீரும்தான் கோட்டாவின் இந்த நிலைக்குக் காரணமாகும் எனவும் அவர் சொல்கின்றார்.

“69 லட்சம் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவர், மிகக் குறுகிய காலத்தில் இவ்வாறு விரட்டப்படுவதென்பது நடக்கக் கூடிய விடயமல்ல. ஆனால் நடந்திருக்கிறது. மனித மனங்களுக்குள்ள சக்தியினால்தான் இது சாத்தியமாகியுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“கோட்டாபய ராஜபக்ஷ – தனது அண்ணன் மஹிந்தவை நம்பி அரசியலுக்குள் வந்தவர். கோட்டா ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அவரின் அண்ணன் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ஏராளமான ஊழல்கள் நடந்தன. அது கோட்டாவின் ஆட்சியிலும் தொடர்ந்தபோது இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உள்ளதல்லவா? எங்காவது போய் முட்ட வேண்டுமல்லவா? அதுதான் நடந்துள்ளது”.

இதன்போது புதிய ஜனாதிபதி தெரிவு குறித்துப் பேசிய அவர், “ரணில் போன்ற ஒரு திறமைசாலிதான் புதிய ஜனாதிபதியாக வரவேண்டும். ஆனாலும் ரணிலுடைய கடந்த ஆட்சிக் காலத்தில் – அவர் பிரதமராக இருந்த போது, அவருடன் இருந்தவர்கள் – மத்திய வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு பிழைகளைச் செய்தார்கள் எனச் சொல்லப்படுகிறது, அவற்றினை ரணில் தட்டிக் கேட்கவில்லை. அந்தப் பிழைகளை ரணில் தடுத்திருந்தால் அவருக்கு இவ்வளவு எதிர்ப்பு வந்திருக்காது” என்கிறார்.

“ஆனாலும் அடுத்த ஜனாதிபதி பதவிக்கு ரணில்தான் தகுதியானவராகத் தெரிகின்றார். சஜித் பிரேமதாஸவுக்கு வெளிநாட்டு ராஜதந்திர உறவில் எந்தளவுக்கு அனுபவமும் ஆற்றலும் உண்டு எனத் தெரியவில்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவை இருக்கின்றன”.

“ரணில் விக்ரமசிங்க அமைச்சராக இருந்தபோதுதான் யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது. அதில் அவருக்கும் பங்கிருக்கும்தானே. சில நாட்களுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்டபோது, அங்கிருந்த அவரின் புத்தகங்கள் அழிந்து போயின எனக் கவலைப்படுகிறார். ஆனால், யாழ்ப்பாண நூலகத்தில் இருந்த புத்தகங்கள் – அவரின் வீட்டில் இருந்ததாகக் கூறப்படும் புத்தகங்களின் எண்ணிகையிலும் பல மடங்கு அதிகம்” எனக் கூறிய ஹரி பிரதாப்; “இப்படி ரணில் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளபோதும், அவரின் அறிவு, திறமை, வெளிநாடுகளுடனான தொடர்புகள் போன்றவற்றின் நிமித்தம், அடுத்த ஜனாதிபதியாக அவரை ஏற்றுக் கொள்ள முடியும்,” என்கிறார்.

“அரசியலில் ரணில் நரி”

நாட்டில் நடந்த உள்நாட்டு யுத்தத்தின் போது ஏற்பட்டிராத பொருளாதார நெருக்கடி, கோட்டாவின் காலத்தில் ஏற்பட்டு, முழு நாட்டினையும் பாதித்துள்ளது என்கிறார் – அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும் அரச உத்தியோகத்தருமான எம்.எப். நவாஸ்.

நவாஸ்

மக்களின் எதிர்பார்ப்பினை கோட்டா நிறைவேற்றவில்லை எனக் கூறும் அவர்; மக்களின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டமையே கோட்டாபய ராஜபக்ஷ பதவியிழக்கக் காரணமாக அமைந்தது என்கிறார்.

“ராஜபக்ஷவினரின் ஆட்சியை – பல தசாப்தங்களுக்கு அசைக்க முடியாது என்றார்கள். ஆனால் மக்கள் போராட்டத்தின் முன்பாக அதுவெல்லாம் நின்று பிடிக்காது”.

“நாட்டில் யுத்தம் நடந்தபோது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிகள் கூட, சில எல்லைகளுக்குள்தான் இருந்தன. ஆனால், கோட்டாவின் ஆட்சியில் – முழு நாடுமே பொருளாதார சீர்கேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டாவுக்கு எதிரான இந்தப் போராட்டம் உணர்வு ரீதியானதாகும்” எனவும் நவாஸ் கருத்து வெளியிட்டார்.

எதிர்வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி தெரிவு குறித்து அவர் கூறுகையில்; “ரணில் விக்ரமசிங்கவே அதற்குப் பொருத்தமானவராகத் தெரிகிறார்” என்றார்.

“நாடாளுமன்றத் தேர்தலின் போது மக்களால் அவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது”.

“ரணில் விக்ரமசிங்க – கடந்த காலங்களில் பிரதமராக இருந்து இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கிறார். அப்போது தந்திரோபாய ரீதியில் இனங்களுக்கிடையில் அவர் பிரச்சினைகளை மூட்டி விட்டிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஆனாலும் அவரின் ஆட்சியில் மக்களுக்கு வாழ்க்கைச் செலவு சுமையாக இருந்ததில்லை” என கூறினார்.

சர்வதேச ரீதியில் ரணில் பிரபல்யம் மிக்கதொரு நபர் எனக் குறிப்பிடும் ஊடகவியலாளர் நவாஸ்; “அவர் அரசியல் குடும்பப் பின்னணியைக் கொண்டவர், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் கூட அமைச்சராக இருந்தவர், பல தடவை அவர் பிரதமராகவும் பதவி வகித்தவர். அரசியலில் அவரை நரி என்கிறார்கள். அதனால் அவர் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர்” என்கிறார்.

சஜித் நல்லதொரு தெரிவாக அமையும்

இதேவேளை, “ஆட்சியாளர்களாக இருந்தவர்களைத் தவிர்த்து, புதியவர் ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வது தற்போதைய நிலைமையில் பொருத்தமாக இருக்கும்” என்றும், “அதன்படி சஜித் பிரேமதாஸ நல்ல தெரிவாக அமையும்” எனவும் – கீரை வியாபாரத்தில் ஈடுபடும் கே. ஜெகநாதன் கூறுகிறார். இவர் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்.

ஜெகநாதன்

“ராஜபகஷவினரை ராஜாக்கள் எனக் கூறிக் கொண்டிருந்தவர்கள்தான், கோட்டாவை விரட்டியிருக்கின்றனர். ஆனாலும், இதனை அவருக்கு கடவுள் கொடுத்த தண்டனையாகவும் தீர்ப்பாகவும் நான் பார்க்கிறேன். அந்தளவுக்கு அவர் தமிழ் மக்களைக் கொன்று குவித்தார். இதனை மக்கள் தீர்ப்பு என்பதை விடவும் இறைவனின் தீர்ப்பு என்று கூறுவதே பொருத்தமாகும்” எனவும், ஜெகநாதன் தெரிவித்தார்.

ஆட்சியாளர்களாக இருந்தவர்களைத் தவிர்த்து – புதியவர் ஒருவர் ஆட்சிக்கு வரவேண்டும் எனக் குறிப்பிடும் அவர்; அரசாங்கமும் அவ்வாறுதான் அமைய வேண்டும் என்பது தனது எதிர்பார்ப்பாகும் எனவும் கூறினார்.

“இதற்கு பொருத்தமானவராக சஜித் பிரேமதாஸ உள்ளார். அவர் நல்லதொரு தெரிவாக இருப்பார்”.

“ரணில் விக்ரமசிங்கவின் கடந்த கால ஆட்சிகளிலும் பிரச்சினைகள் இருந்தன. இதுவரையும் அவை தொடர்கின்றன” எனவும் ஜெகநாதன் கருத்து வெளியிட்டார்.

“சுப்ரமணிய சுவாமி சொல்லது போலில்லை”

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வியாபார நிறுவனமொன்றை நடத்தி வரும் சுபைர், நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில்; “ராஜபக்ஷவினரின் குடும்ப ஆட்சி, இன ரீதியாக மக்களை கொடுமைப்படுத்தியமை மற்றும் கொவிட் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை எரித்தமை போன்ற விடயங்கள், கோட்டா மீது கடுமையான கோபத்தை மக்களுக்கு ஏற்படுத்தியிருந்தது” என்கிறார்.

அந்த வகையில் அவரை பதவியிலிருந்து விரட்டியமை – போராட்டக்காரர்கள் செய்த நல்லதொரு விடயம் எனவும், மக்கள் பாற்சோறு வழங்கி அதனைக் கொண்டாடுகின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்தியாவின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணிய சுவாமி; ’69 லட்சம் மக்களின் ஆதரவுடன் வந்த கோட்டாவை எப்படி பதவி விலக்க முடியும்’ என்று கேட்டிருந்தார். ஆனால், கோட்டாவை விரட்டியவர்களில் பெரும்பாலானோர் அவருக்கு ஆதரவளித்த 69 லட்சம் வாக்காளர்கள்தான்”.

சுபைர்

“கோட்டாவுக்கு எதிரான போராட்டம் உச்சமடைந்தபோது, இலங்கைக்கு இந்திய ராணுவம் அனுப்பப்பட வேண்டும் எனவும் சுவாமி கூறியிருந்தார். கோட்டாவை விரட்டியவர்கள் தீவிரவாதிகளல்லர்; மக்கள்தான். அதனால் இங்கு ஏன் இந்திய ராணுவம் அனுப்பப்பட வேண்டும்” எனவும் சுபைர் கேள்வியெழுப்பினார்.

“அரசாங்கம் என்பது மக்கள். மக்கள் என்பது அரசாங்கம். மக்களுக்கு விருப்பமில்லை என்றால், ஆட்சியாளர்கள் போய்விட வேண்டும். ஆனால், இது தொடர்பாக கோட்டா இறுதியில் எடுத்த முடிவு தவறானது. அவர் முன்கூட்டியே போயிருக்க வேண்டும்”.

“ரணில் விக்ரமசிங்கவை ‘கோட்டாவின் ஆள்’ என மக்கள் கூறுகின்றனர். ‘ராஜபக்ஷ குடும்பத்தினரை மீண்டும் ரணில் காப்பாற்றுவாரா’ என்கிற கேள்வி மக்களிடையே இருக்கிறது.

ஆனாலும் புதிய ஜனாதிபதி வெற்றிடத்தை நிரப்புவதற்கு ரணிலைத் தவிர வேறு தேர்வுகள் இல்லை. அதனால் ரணிலை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. சஜித், டலஸ் போன்றவர்களை விடவும் ரணில் பொருத்தமானவர்.

அவர் அரசியல் அனுபவத்தில் முதிர்ந்தவர், வெளிநாட்டுத் தொடர்புகளைக் கொண்டவர், அதனால் அவர் இப்போதைய பிரச்சினைக்கு ஏதாவது நல்ல தீர்வினைப் பெற்றுத் தருவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்” என சுபைர் மேலும் கூறினார்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்