தலைப்புச் செய்திகள்

புதிய ஜனாதிபதி தெரிவு 20ஆம் திகதி: யாருக்கு அடிக்கப் போகிறது அதிஷ்டம்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை பதவி விலகினால், ஜூலை 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கும்.

கட்சித் தலைவர்கள் இன்று கூடி நாடாளுமன்றத்தை ஜூலை 15ஆம் திகதி கூட்ட தீர்மானித்துள்ளனர்.

புதிய ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை19ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே வாக்கெடுப்பு நடைபெறும்.

இதற்கிடையில், சர்வகட்சி அரசாங்கத்துக்கு உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து முழு அமைச்சரவையும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (11) காலை பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை அமைச்சர்களுடன் கலந்துரையாடினார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு உடன்பாடு ஏற்பட்டவுடன், அந்த அரசாங்கத்திடம் தமது பொறுப்புக்களை ஒப்படைக்கத் தயார் என கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைச்சர்கள் அனைவரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பல அமைச்சர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.