‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கை தயார்; ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்காக காத்திருக்கிறோம்: ஞானசார தேரர் தெரிவிப்பு

🕔 June 29, 2022

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களாலும் கையொப்பமிடப்பட்டுள்ளதாகவும், அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிப்பதற்கான திகதியும் நேரமும் கோரப்பட்டுள்ளதாகவும் அந்த செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

“அநேகமாக இன்று (29) நியமனம் உறுதி செய்யப்படும்” என்றும் அவர் நேற்று (28) தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலணியின் முடிவுகள் தொடர்பில் தேரரிடம் ஊடகமொன்று வினவியபோது; ​​”அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் வரை, அது தொடர்பில் கருத்துக் கூற முடியாது” என தெரிவித்த அவர், அந்த அறிக்கையை பொதுமக்களுக்கு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறியுள்ளார்.

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 13 பேர் கொண்ட பணிக்குழுவை 27 ஒக்டோபர் 2021 அன்று ஜனாதிபதி ராஜபக்ஷ நியமித்தார்.

இதற்கு பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தலைமை தாங்குவதுடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க அதன் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

2022 பெப்ரவரி 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில், இடைக்கால அறிக்கைகளை ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்குமாறு செயலணிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும், அதற்குள் செயலணி இறுதி அறிக்கையை தயாரிக்காததால், ஜனாதிபதி அதன் காலத்தை நீட்டித்தார்.

இதேவேளை, செயலணியின் வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஞானசார தேரர், குறித்த செயலணியால் சட்டங்களை இயற்ற முடியாவிட்டாலும், “விஞ்ஞானமற்ற செயற்பாடுகள் மற்றும் அரசியல் செல்வாக்கு போன்ற பல்வேறு சம்பவங்கள் காரணமாக தாமதமாகி வரும் சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்” என கடந்த காலத்தில் தெரிவித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க, இந்த செயலணிக்கு நியமிக்கப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் இருவர், ராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments