05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்களும் வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்லலாம்: அமைச்சரவை தீர்மானம்

🕔 June 28, 2022

வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு 05 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான ‘குடும்பப் பின்னணி அறிக்கை’ சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேவை இல்லை என, அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இது குறித்த நிபந்தனையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில்;

வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு 05 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் இன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் தற்போது நிலவுகின்ற ‘குடும்பப் பின்னணி அறிக்கை’ சமர்ப்பிக்கப்பட வேண்டிய கட்டாயத் தேவை இருப்பது, பெண்களின் உரிமைகள் மீறப்படுவதாக பெண்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச அறிக்கைகள் பலவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறே ஒருசில சந்தர்ப்பங்களில் குறித்த அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காக தேவையான அனைத்துத் தகைமைகளையும் பூர்த்தி செய்திருப்பினும், ஒருசில அலுவலர்கள் பல்வேறு காரணங்களால் குறித்த அறிக்கையைத் தாமதப்படுத்துவதால் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்காக செல்வதற்கு எதிர்பார்க்கின்ற பெண்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையை சமர்ப்பித்தற்குத் தகைமையற்ற ஒருசில பெண்கள், வேறு சட்டவிரோத வழிமுறைகளைக் கையாண்டு எந்தவொரு கண்காணிப்புக்களும் இன்றி வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இது தொடர்பாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, இரண்டு (02) வயதோ அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள பெண்கள் வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது கட்டாயமாகக் குடும்பப் பின்னணி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனும் தேவையிலிருந்து விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே, வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்லும் பெண்களின் வயதை, 21 ஆக அரசாங்கம் குறைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments