பொருளார சிக்கலைத் தீர்க்க தேநீரை குறைவாக குடியுங்கள்: அமைச்சர் கோரிக்கை

🕔 June 15, 2022

தேநீர் குடிப்பதை குறைத்துக் கொண்டால் பாகிஸ்தான் அரசுக்கு உண்டாகும் இறக்குமதிச் செலவு குறையும் என்றும், அதன் மூலம் மோசமான பொருளாதார சூழ்நிலையை சீர்படுத்த முடியும் எனவும் சிரேஷ்ட அமைச்சர் ஆசன் இக்பால் கூறியுள்ளார். இவர் பாகிஸ்தானின் திட்டம், வளர்ச்சி மற்றும் சீர்திருத்தங்களுக்கான அமைச்சராக உள்ளார்.

பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்பொழுது மிகவும் குறைவாக உள்ளது.

தற்போது அந்நாட்டு அரசிடம் இருக்கும் வெளிநாட்டு பணத்தை வைத்து இரண்டு மாத காலத்துக்கும் குறைவான தேவையை பூர்த்தி செய்யும் அளவிலேயே இறக்குமதி செய்ய முடியும் என்பதால் பாகிஸ்தான் தற்போது அந்நிய செலாவணியை திரட்டுவதற்கான அவசரத் தேவையில் உள்ளது.

உலகிலேயே அதிகமான அளவு தேயிலைத் தூளை இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் 600 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான (இலங்கை மதிப்பில் 20954 கோடி ரூபா) மதிப்புள்ள தேயிலைத் தூளை பாகிஸ்தான் இறக்குமதி செய்தது.

”நாம் கடன் வாங்கித்தான் தேயிலைத் தூளை இறக்குமதி செய்கிறோம் என்பதால், நீங்கள் குடிக்கும் தேநீரின் அளவில் ஒன்று அல்லது இரண்டு கப்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என நாட்டு மக்களுக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்” என அமைச்சர் இக்பால் கூறியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

தொழில் நிறுவனங்களும் தங்களது கடைகளை இரவு 08:30 மணிக்கே மூடிவிட்டு மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவ வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்