இலங்கையர்களில் 66 வீதமானோர் தினசரி உண்ணும் உணவுகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர்: ஆய்வில் தெரிவிப்பு

🕔 June 15, 2022

லங்கையர்களில் 66 வீதமானவர்கள் தினசரி உண்ணும் உணவுகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் மற்றும் அரசாங்கம் இணைந்து ஏப்ரல் மாதம் நடத்திய உணவு பாதுகாப்பு மதிப்பீட்டில் இது தெரிய வந்துள்ளது.

இது 17 மாவட்டங்களில் உள்ள ஏழ்மையான குடும்பங்களை ஆய்வு செய்தபோது 86 சதவீதம் பேர் மலிவான பொருள்களை வாங்கிச் சமாளிக்கின்றனர். 95 சதவீதமானோர் குறைவான சத்துணவைப் பெறுகின்றனர். 83 வீதமானோர் வாங்கும் பொருட்களின் அளவைக் கட்டுப்படுத்தியுள்ளனர். 66 வீதமானோர் தினசரி உண்ணும் உணவின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர் எனும் விவரம் தெரியவந்துள்ளது.

இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. உணவு, எரிபொருளுக்கான தட்டுப்பாடு மற்றும் உணவுகளுக்கு விலைகள் அதிகரித்துள்ளமை காரணமாக, மக்கள் தங்கள் அன்றாட உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய கடுமையாகப் போராடுகின்றனர்.

கோவிட் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வாங்கும் மக்களின் திறனும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உணவுப் பணவீக்கம் 57 சதவீதமாக உள்ளது. இது உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வெளிநாட்டு கையிருப்பு குறைவு, சாதகமற்ற நாணய மாற்று விகிதங்கள் மற்றும் குறைந்த உள்நாட்டு உணவு உற்பத்தி ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் வரை 1.7 மில்லியன் இலங்கை மக்களின் மிக அவசரமான மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்ய 47.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இதில், 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உலக உணவுத் திட்டத்தின் நடவடிக்கைகளுக்கானதாகும்.

Comments