நீதிமன்ற அவமதிப்பு இரண்டாவது வழக்கு: சிறையில் இருக்கும் போதே, முன்னாள் எம்.பி ரஞ்சனுக்கு மற்றொரு தண்டனை விதித்து தீர்ப்பு

🕔 June 7, 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவருக்கு ஐந்தாண்டுகள் ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று (07) அறவித்தது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தாம் தெரிவித்த கருத்து நீதித்துறைக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கோருவதாகவும் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் கூறினார்.

2018 ஆம் ஆண்டு ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி குழாமின் அமைப்பு தொடர்பில், சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அப்போதைய பிரதியமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரியில், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் – ரஞ்சன் ராமநாயக்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

ஜனாதிபதியின் விசேட மன்னிப்புக்காக பல முறையீடுகள் செய்யப்பட்ட போதிலும், அது கிடைக்காமை காரணமாக ரஞ்சன் ராமநாயக்க தற்போதும் தனது சிறைத்தண்டனையை தொடர்ந்து அனுபவித்து வருகிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்