கடவுச் சீட்டுக்கான படங்களைப் பிடித்து ஒப்புதலுக்காக அனுப்புவதில் சிக்கல்: ஸ்ரூடியோ உரிமையாளர்கள் சங்கம் விசனம்: தடைகளை நீக்கித் தருமாறும் கோரிக்கை

🕔 June 6, 2022

– முன்ஸிப் அஹமட் , படங்கள்: ஐ.எல். றிஸான் –

டவுச் சீட்டுக்காக விண்ணப்பிக்கின்றவர்களை படம் பிடிக்கும் தாங்கள், அவற்றினை குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்துக்கு ‘ஒன்லைன்’ மூலம் அனுப்பி – ஒப்புதல் பெறுவதிலுள்ள தடைகளை நீக்கித் தருமாறு, அகில இலங்கை நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்களின் அம்பாறை மாவட்ட சங்கம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

அக்கரைப்பற்றில் நேற்று (05) இரவு மேற்படி சங்கத்தினர் நடத்திய ஊடக சந்திப்பில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

“கடவுச் சீட்டுக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான படங்களை பிடிப்பதற்கு அனுமதி பெற்ற ஸ்ரூடியோகளின் கணிணிகளில், குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தினர் மென்பொருள் ஒன்றினை நிறுவித் தருகின்றனர்.

அதிலுள்ள நியமங்களுக்கு அமைய படங்களைப் பிடித்து, அவற்றின் ஊடாக’ ஒன்லைன்’ மூலம் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக, அந்தப் படங்களை நாங்கள் அனுப்பி வைக்க வேண்டும். ஒப்புதல் கிடைத்த பின்னர்தான் குறித்த படங்களை நாங்கள் ‘பிரின்ட்’ எடுக்க முடியும்.

ஆனால் ஒவ்வொரு நாளும் படங்களை அனுப்புவதில் நாங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். காரணம், குறித்த படங்களை அனுப்புவதற்கான குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் ‘சர்வர்’ (Server) பெரும்பாலும் இயங்காமல் உள்ளது” என, மேற்படி சங்கத்தின் தலைவர் ஆர். பிரகாஷ் தெரிவித்தார்.

“ஒரு படத்தைப் பிடித்து குறித்த சில நிமிடங்களுக்குள் அந்தப் படத்தை குடிவரவு – குடியகல்வு திணைக்களத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக நாங்கள் அனுப்ப வேண்டும். குறித்த நேரம் தாண்டினால் அந்தப் படத்தை அனுப்ப முடியாது. இந்த நிலையில் அவர்களின் ‘சர்வர்’ (Server) இயங்குவதில் பிரச்சினைகள் ஏற்படும் போது, எம்மிடம் படம் பிடித்தவர்களை மீளவும் அழைத்து, திரும்பவும் படம் பிடிக்க வேண்டியுள்ளது. இதன்போது இதற்கான போக்குவரத்துச் செலவுகளையும் நாமே ஏற்க வேண்டியுள்ளது” எனவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு நாளும் இந்தப் பிரச்சினைகளை தாம் எதிர்கொள்வதால், தமது தொழிலை நடத்துவதற்கு கஷ்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினை குறித்து விவரித்து, அதனை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை விடுத்து, மூன்று கடிதங்களை குடிவரவு – குடியகல்வு திணக்கள கட்டுப்பாட்டாளருக்கு தாம் எழுதியுள்ள போதிலும், அதனால் எவ்வித பயனும் ஏற்படவில்லை எனவும், அகில இலங்கை நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்களின் அம்பாறை மாவட்ட சங்கத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர், தமது தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடவுச் சீட்டுக்காக விண்ணப்பிப்பதற்காகப் பிடிக்கும் படங்களை அனுப்புவதில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, தமது தொழிலில் மேலும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது எனவும் ஸ்ரூடியோ உரிமையாளர்கள் கூறினர்.

எனவே இவ் விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலையிட்டு, தாம் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத் தர வேண்டுமெனவும் அவர்கள் இதன்போது கேட்டுக் கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள 37 ஸ்ரூடியோகள் உட்பட நாட்டிலுள்ள சுமார் 05 ஆயிரம் ஸ்ரூடியோகள் இந்த பிரச்சினையை எதிர்கொள்வதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க, தாம் இவ்வாறானதொரு பிரச்சினையை எதிர்நோக்கி வரும் நிலையில், குடிவரவு – குடியகல்வு திணைக்கள அலுவலகத்தை அண்மித்துள்ள சில ஸ்ரூடியோகளில் எவ்வித பிரச்சினைகளும் இன்றி, கடவுச் சீட்டுக்கான படங்கள் எடுக்கப்பட்டு, அவை ‘ஒன்லைன்’ மூலம் அனுப்பப்படுவதாக தமக்கு அறியக் கிடைத்துள்ளதாகவும் நேற்றைய ஊடக சந்திப்பில், அகில இலங்கை நிபுணத்துவ புகைப்பட ஸ்ரூடியோ உரிமையாளர்களின் அம்பாறை மாவட்ட சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

தாம் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைக்கு 15ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்காமல் போகுமானால், 15ஆம் திகதியன்று, குடிவரவு – குடியகல்வு திணைக்கள அலுவலகத்தின் முன்பாக, இலங்கையிலுள்ள அனைத்து ஸ்ரூடியோ உரிமையாளர்களும் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் இதன்போது சங்கத்தினர் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்