அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை: தண்டம் மற்றும் நஷ்டஈடு செலுத்துமாறும் உத்தரவு

🕔 June 6, 2022

ர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 64 மில்லியன் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐந்து வருடம் ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலக்கரத்ன இன்று (06) விதித்துள்ளார்.

வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் கோரிய சம்பவத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, உறுதிப் பத்திரமொன்றில் கையெழுத்திட்டுள்ள குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 25 மில்லியன் ரூபா தண்டப் பணத்தை செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், இந்த தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 09 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்புக்கு ஒரு மில்லியன் ரூபா நட்டஈட்டை செலுத்துமாறும், அந்த நட்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதி ஏனைய குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பிரதிவாதிகள் அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் கோரியதாக கூறப்படும் சம்பவத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரின் ரணதுங்க உள்ளிட்ட மூவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கொழும்பு புறநகர் பகுதியான கொலன்னாவை – மீதொட்டமுல்ல பகுதியிலுள்ள காணியொன்றில் தங்கியிருந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளை அப்புறப்படுத்தி, அந்த இடத்தை பெற்றுக்கொடுப்பதற்கு வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி, 64 மில்லியன் ரூபா கப்பமாக கோரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06ம் தேதி மற்றும் அந்த ஆண்டு ஜுன் மாதம் 2ம் தேதிக்கு உட்பட்ட காலப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த காலப் பகுதியில் மேல் மாகாண முதலமைச்சராக தற்போதைய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடமையாற்றியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரின் ரணதுங்க மற்றும் நரேஷ் பரிக் ஆகியோருக்கு எதிராக கடந்த ஆட்சிக் காலத்தில் சட்ட மாஅதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்