ஐ.எம்.எப் நிபந்தனைக்கு அமையவே வரிகள் அதிகரிக்கப்பட்டன; இந் நிலை மக்களை பட்டினி சாவுக்குள் தள்ளிவிடும்: பேராசிரியர் விஜேசந்திரன்

🕔 June 4, 2022

நாட்டில் பெறுமதி சேர் வரி (வெற்) மற்றும் தொலைத் தொடர்புகள் வரி அதிகரிக்கப்பட்டமையானது, மக்களை பட்டினி சாவுக்குக் கொண்டு செல்லும்’ என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் எஸ். விஜேசந்திரன் பிபிசி தமிழுக்குத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) நிபந்தனைகளுக்கு அமையவே வெற் வரி மற்றும் தொலைத் தொடர்புகள் வரி உள்ளிட்டவை அண்மையில் அதிகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

”பொருட்களின் விலைகள் மீண்டும் 60 – 70 சதவீதம் அதிகரிக்கும். வரி விதிப்பை வர்த்தகர்கள், பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் மீதே சுமத்துவார்களே தவிர, அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆகவே பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும்”.

“அரிசி விலை கிட்டத்தட்ட 400 ரூபாய்க்கு போகக்கூடிய நிலைமை ஏற்படும். இந்த வரி அதிகரிப்புக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையே பிரதான காரணம். சர்வதேச நாணய நிதியம் கொடுத்த 03 நிபந்தனைகளில் இதுவும் ஒன்று” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் மீது இந்த வரிகளை அரசாங்கம் சுமத்துகின்றது. வரி அதிகரிப்பு மாத்திரம் அல்லாமல், சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக்கொண்டால், அந்த கடனைச் செலுத்தும் சுமையும் மக்கள் மீதே திணிக்கப்படும்.

ஆகவே இலங்கை தொடர்ந்தும் கடன் நச்சு வட்டத்திற்குள் சுழல்வதற்கும் வருமான பற்றாக்குறை நச்சு வட்டத்திற்குள் சுழல்வதற்கும் இது காரணமாக இருக்கும்.

மேன்மேலும் மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதன் ஊடாக, மக்களை பட்டினி சாவு நிலைமைக்குக் கொண்டு செல்ல இது வழி வகுக்கும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Comments