தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்: தேனிலவுக்கும் நாள் குறித்தாயிற்று

🕔 June 3, 2022

– கீதா பாண்டே –

னிநபர்கள் தம்மைத்தாமே மணந்துகொள்ளும் ‘சோலோகமி’ (Sologamy ) எனும் திருமண முறை மேற்கில் பிரபலமாகி வரும் ஒன்று. இப்போது இது இந்தியாவில் கால் பதித்துள்ளது.

ஜூன் 11ம் திகதி, இந்தியாவின் மேற்கு குஜராத்தின் வதோதரா நகரில், க்ஷாமா பிந்துவின் திருமணம் பாரம்பரிய இந்து முறைப்படி நடைபெற உள்ளது.

அப்போது, மணப்பெண்ணுக்கான சிவப்புப் புடவையணிந்து, நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து, புனிதத் தீயை ஏழுமுறை அவர் வலம் வரப்போவதாக என்னிடம் தொலைபேசியில் சொன்னார்.

வடக்கிந்திய திருமணங்களில் நடைபெறும் மஞ்சள் பூசும் நிகழ்வு, சங்கீத் போன்றவையும் நடைபெறும். திரும்ணத்திற்குப் பின் அவர் இரண்டு வார தேனிலவுக்காக கோவா செல்கிறார்.

ஆனால், பிந்துவின் திருமணத்தில் ஒரு விஷயம் மட்டும் இருக்காது — மாப்பிள்ளை.

“என்னை முழுமையாக ஏற்கிறேன், பலவீனங்களோடு”

ஆம், பிந்து ‘தன்னைத்தானே மணந்துகொள்ள’ திட்டமிட்டிருக்கிறார். இது இந்தியாவின் முதல் ‘சோலோகமி’ திருமணமாக இருக்கலாம்.

“பலரும் என்னை ‘மணந்துகொள்வதற்கு சிறந்த பெண்’ என்று சொல்கிறார்கள்,” என்கிறார் 24 வயதான சமூகவியல் மாணவரும் ப்ளாகருமான பிந்து. “நான் அவர்களிடம் சொல்கிறேன், ‘நான் என்னையே மணந்துகொள்கிறேன்’.”

தன்னைத் தானே மணப்பதால், தன் வாழ்வை “சுய காதலுக்கு” அர்ப்பணிக்கப்போவதாக அவர் சொல்கிறார்.

“தன்னையே மணந்துகொள்வது என்பது உங்களுக்காக நீங்களே இருப்பீர்கள் என்ற பொறுப்பு, மிகவும் உயிரூட்டமுள்ள, அழகான, மிக்க மகிழ்ச்சியான நபராக நீங்கள் வளர்ந்து பரிணமிக்க உதவும் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கை முறையையும் தேர்ந்தெடுப்பது”.

“இது நான் என்னுடைய அத்தனை பக்கங்களையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கும் ஒரு வழி. குறிப்பாக, நான் மறுக்க முயன்ற, புறந்தள்ள முயன்ற என் முகங்கள், உதாரணத்துக்கு என்னுடைய பலவீனங்கள் — அவை உடல் ரீதியான, மன ரீதியான, உணர்வு ரீதியான பலவீனங்கள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்”.

“என்னைப் பொறுத்தவரை, இத்திருமணம், என்னையே நான் முழுமையாக ஏற்றுக்கொளும் ஒரு செயல். நான் சொல்ல வருவது — நான் என்னையே ஏற்றுக்கொள்கிறேன், அழகாக இல்லாத என்னுடைய பக்கங்களையும் கூட.”

தனது குடும்பம் தம்மை வாழ்த்தியதாகவும், தனது நண்பர்கள் திருமணத்திற்கு வரவிருப்பதாகவும் பிந்து சொல்கிறார்.

திருமண அழைப்பிதழ்

” ‘நீ எப்போதும் புதுசா எதாவது யோசிப்ப’, என்று என் அம்மா சொன்னார். ஆனால் எனது பெற்றோர், திறந்த மனதுடையவர்கள், இதை அவர்கள் அமைதியாக ஏற்றுக்கொண்டார்கள். ‘நீ சந்தோஷமாக இருந்தால் எங்களுக்கு அது போதும்,’ என்றார்கள்,” என்கிறார் பிந்து.

தொலைக்காட்சியில் இருந்து வாழ்க்கைக்கு

தன்னையே மணந்துகொள்ளும் முறை முதன் முதலில் அறிமுகமானது 20 வருடங்களுக்கு முன்பு. ‘Sex and the City’ என்ற அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரில் வரும் கேரி ப்ராட்ஷா (Carrie Bradshaw) எனும் பாத்திரம் இதைப்பற்றிப் பேசியது. ஆனால் அது ஒரு நகைச்சுவை தொடர்.

அப்போதிருந்து இத்தகைய திருமணங்கள் நூற்றுக்கணக்கில் நடந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன — பெரும்பாலும் பெண்கள் இதை செய்திருக்கிறாகள். இன்னொரு விசித்திரமான சம்பவத்தில், தன்னைத் தானே மணந்த 33 வயதன பிரேசில் நாட்டுப் பெண், மூன்று மாதங்களில் தன்னையே விவாகரத்து செய்தார்.

இந்த டிரெண்டைச் சார்ந்து பல வணிக முயற்சிகளும் தோன்றியிருக்கின்றன — திருமண ஆடைகள், மோதிரங்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவை.

ஆனால் இவையெல்லம் இன்னும் இந்தியாவில் நடக்காததனால், பிந்துவின் திருமணம் பேசுபொருளாகியிருக்கிறது.

விவாதங்கள்

மறுபுறம் மனநல நிபுணர்கள் சோலோகமி சொல்ல வரும் கருத்தினால் ‘ஆச்சரியப் படுகிறார்கள்’.

“இது எனக்கு மிகவும் விசித்திரமான கருத்தாகத் தோன்றுகிறது,” என்கிறார் மனநல மருத்துவப் பேராசிரியரும், சண்டிகரின் PGIMER Hospitalன் முன்னாள் முதல்வருமான டாக்டர் சவிதா மல்ஹோத்ரா.

“அனைவரிடமும் சுய காதல் உண்டு,” என்கிறார் அவர். ஆனால் அதை நிரூபிக்க இதுபோன்ற செயல்கள் செய்ய வேண்டியதில்லை என்கிறார். “மேலும் திருமணமென்பது, இருவர் இணைவது.”

சமூக வலைதளங்களில் இது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. சிலர் பிந்துவின் முடிவைப் பாராட்டினாலும், பலர் சோலோகமியைப் புரிந்துகொள்ள சிரமப்படுகிறார்கள்.

ட்விடரில் ஒருவர் ‘இன்னொருவர் இல்லாதது எப்படி திருமணம் ஆகும்?’ என்றார், இன்னொருவர், பிந்து குடும்பப் பொறுப்புகளிலிருந்து தப்பிக்கப் பார்ப்பதாகப் பதிவிட்டிருந்தார்.

சிலர் இதனை ஒரு ‘வினோதமான, துயரமான’ விஷயம் என்கிறார்கள்.

ஆனால் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பிந்து சொல்வது இதுதான்: “யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் — அது ஒரு ஆணோ, பெண்ணோ, அல்லது என்னையேவோ. என்னையே மணந்துகொள்வதன்மூலம் சோலோகமியை இயல்பான ஒன்றாக்க நினைக்கிறேன். நாம் இந்த உலகத்துக்கு தனியாகத்தான் வருகிறோம், தனியாகத்தான் போகப்போகிறோம். அதனால் நம்மைத் தவிர நம்மை வேறு யார் அதிகமாக நேசிக்க முடியும்? நீங்கள் இடறி விழுந்தால், நீங்களே தான் உங்களை தூக்கி நிறுத்த வேண்டும்.”

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்