மே சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எம்.பிகளுக்கு வீடுகளை வழங்க, 1795 மில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை

🕔 June 3, 2022

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வியத்புர வீடமைப்புத் திட்டத்தில் 101 வீடுகளை வழங்க 1,795 மில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

மே 09 கலவரத்தில் வீடுகள் சேதமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக அடிப்படையில் இந்த வீடுகள் வழங்கப்படும் என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தொகையிலிருந்து நகர அபிவிருத்தி அதிகாரசபையானது, 2016ஆம் ஆண்டுக்கான ஒப்பந்ததாரர்களின் செலவுகளை ஈடுகட்ட 897 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது.

வீடுகளை பெற்றுக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பணம் செலுத்தும் அடிப்படையில் வீடுகளை பெற்றுக்கொள்ள இணங்கும் பட்சத்தில், பெறப்பட்ட பணம் திறைசேரிக்கு திருப்பி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 09 வன்முறையில் உயிரிழந்த பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மனைவிக்கும் இத்திட்டத்தில் இருந்து வீடு வழங்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் வீடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த வீடு ஒன்றின் பெறுமதி 17 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

மே 09 சம்பவத்தின் போது 47 வீடுகளே சேதமாக்கப்பட்டதாகவும், ஆனால் 101 வீடுகள் ஏன் வழங்கப்படுகின்றன எனவும் கேள்வியெழுப்பப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments