இந்த வருடத்தில் வழங்கப்பட்ட கடவுச் சீட்டுகளின் எண்ணிக்கை தொடர்பில் தகவல் வெளியானது

🕔 June 2, 2022
Passport of Sri Lanka on white background

ந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள் மொத்தம் 288,645 பேர் கடவுச் சீட்டுக்களைப் பெற்றுள்ளதாக குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு (2021) முழுவதிலும் 382, ​​506 கடவுச் சீட்டுக்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக திணைக்களத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் பியூமி பண்டாரா கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடியுள்ளதாகக் கூறி, இந்த ஆண்டு பலர் கடவுச் சீட்டுக்களைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரியில் மொத்தம் 52,278 கடவுச் சீட்டுக்கள் பெறப்பட்டன. பிப்ரவரியில் 55,381, மார்ச் மாதத்தில் 74,890, ஏப்ரல் மாதத்தில் 53,151, மே மாதத்தில் 52,945 கடவுச் சீட்டுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதன் விளைவாக குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் அதிக பணிச்சுமையை எதிர்கொண்டது என்றும் பியூமி பண்டாரா கூறியுள்ளார்.

எனவே திணைக்களத்துக்கு வரும் முன்னர், முன் பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினசரி அடிப்படையில் 1500 க்கும் மேற்பட்ட பதிவுகள் வழங்கப்படுகின்றன என்று கூறிய அவர், வரிசையில் நிற்பவர்கள் முன் பதிவு செய்யத் தவறியவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“கடவுச் சீட்டுக்களைப் பெறுவதற்கான ஒரு நாள் சேவை பத்தரமுல்லயில் உள்ள குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

மத்தறை, குருணாகல், கண்டி மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் உள்ள திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களிலும் பத்தரமுல்ல அலுவலகத்திலும் சாதாரண கடவுச் சீட்டு சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments