ஹஜ் யாத்திரிகர்கள் வர மாட்டார்கள்: சஊதி அரேபியாவுக்கு இலங்கை அறிவிப்பு

🕔 June 2, 2022

லங்கையிலிருந்து இம்முறை ஹஜ் கடமைக்காக யாத்திரிகர்கள் செல்ல மாட்டார்கள் என்பதை, சஊதி அரேபிய அதிகாரிகளுக்கு இலங்கை அரசு தெரியப்படுத்தியுள்ளதாக இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இம்முறை இலங்கையிலிருந்து 1585 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை சஊதி அரேபியா வழங்கியிருந்தது.

இருந்தபோதிலும் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காகவும் இவ்வருடம் இலங்கையிலிருந்து சஊதி அரேபியாவுக்கு ஹஜ் கடமைக்காக யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதில்லை என, ‘அகில இலங்கை ஹஜ் முகவர் சங்கம்’ மற்றும் ‘ஹஜ் பயண முகவர் சங்கம்’ ஆகியன முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கும் புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கும் கடந்த 31ஆம் தேதி அறிவித்ததாக திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய கொரோனா தொற்று காரணமாகவும் கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளிலும், இலங்கையிலிருந்து ஹஜ் கடமைக்காக யாத்திரிகர்கள் எவரும் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஹஜ் கடமைக்காக இலங்கைக்கு ஒதுக்கீடுகளை வழங்கியமைக்காக சஊதி அரேபிய அதிகாரிகளுக்கு நன்றியினையும், அதேவேளை, இலங்கையிலிருந்து யாத்திரிகர்கள் ஹஜ் கடமைக்கு செல்லாமையினால் சஊதி அரேபிய அதிகாரிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக வருத்தினையும் தெரிவித்துக் கொள்வதாகவும் இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்